search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணை கைகளில் தூக்கி சென்ற போலீஸ்காரர்
    X
    பெண்ணை கைகளில் தூக்கி சென்ற போலீஸ்காரர்

    ஓடும் ரெயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை கைகளில் தூக்கி சென்ற போலீஸ்காரர்

    ஓடும் ரெயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண் பயணியை போலீஸ்காரர் இரண்டு கைகளில் ஏந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வடகராவில் இருந்து திருச்சூருக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று வடகராவில் இருந்து திருச்சூருக்கு சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனிதா (வயது54) என்ற பெண் பயணி பயணம் செய்தார். திருச்சூர் அருகே ரெயில் சென்ற போது அவர் ரெயிலில் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்தார். இதை கவனித்த சக பயணிகள் இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் அனுப்பினர். ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் திருச்சூர் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டனர்.

    அந்த ரெயில் திருச்சூர் ரெயில்நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் ஓமணக்குட்டன் மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.

    வீல் சேர், ஸ்டெச்சர் போன்றவற்றிற்கு காத்திருக்கவில்லை. அவரே உடனடியாக ரெயில் பெட்டிக்குள் நுழைந்தார். அங்கு மயக்க நிலையில் இருந்த அந்த பெண் பயணியை மீட்டு கைகளில் தூக்கிச் சென்றார்.

    தயாராக இருந்த டாக்டர்கள் திருச்சூர் ரெயில் நிலையத்தில் அந்த பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த பயணி திருச்சூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் ரெயில் பயணத்தில் அந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் பயணியை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதித்த ரெயில்வே போலீஸ்காரர் ஓமணகுட்டனை போலீஸ் அதிகாரிகளும், டாக்டர்களும் பாராட்டினர்.

    பெண் பயணியை போலீஸ்காரர் ஓமணகுட்டன் இரண்டு கைகளில் ஏந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    Next Story
    ×