search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி சிலையில் பாஜக கொடி
    X
    காந்தி சிலையில் பாஜக கொடி

    காந்தி சிலையில் பா.ஜனதா கொடியை போர்த்திய மர்ம நபர்கள்: காங்.-கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டம்

    கேரளாவில் காந்தி சிலையில் பா.ஜனதா கொடி போர்த்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள நகராட்சி கட்டிடத்தில் மகாத்மா காந்தி மார்பளவு சிலை உள்ளது. நேற்று இந்த சிலையில் பா.ஜனதா கட்சியின் கொடி போர்த்தப்பட்டு இருந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காந்தியின் சிலையில் பா.ஜனதா கட்சி கொடியை போர்த்திவிட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் காந்தி சிலையை நோக்கி அணிவகுத்து வந்தனர். இதுபோல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினரும் பாலக்காட்டில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினார்கள்.

    பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் நகரசபை தலைவர் அறையில் அமர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து நகராட்சி செயலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பாலக்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா பிரமுகர் ஒருவர் கூறுகையில், எங்கள் கட்சிக்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை. முறையாக விசாரணை நடத்த வேண்டும்என்று தெரிவித்தார்.

    கேரளாவில் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாலக்காடு மற்றும் பண்டாலம் ஆகிய 2 நகராட்சியையும் பா.ஜனதா கைப்பற்றியது. மேலும் கடந்த மாதம் நகராட்சி கட்டிடத்தில் உள்ள மாடியில் ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகம் எழுதிய பேனரை பா.ஜனதா கட்சியினர் கட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×