search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய சங்க நிர்வாகிகள்
    X
    விவசாய சங்க நிர்வாகிகள்

    உறுதியுடன் போராடும் விவசாயிகள்... பிடிவாதம் பிடிக்கும் மத்திய அரசு: இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

    வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிர் மழைக்கு மத்தியில் விவசாயிகள் நடத்தி வரும் இந்த முற்றுகைப் போராட்டம் இன்று 44-வது நாளாக நீடிக்கிறது. அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 7 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. எனவே, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் 2 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

    வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதை தவிர விவசாயிகளின் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். 

    எனவே இன்றைய பேச்சுவார்த்தையிலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான உத்தரவாதம் எதையும் மத்திய அரசு கொடுக்காது என்பது உறுதியாகியிருக்கிறது. 

    சட்டத்தின் பிரிவு வாரியான பேச்சுக்களுக்கு வாய்ப்பில்லை என்றும், இந்த சட்டங்களை ரத்து செய்வதற்காக அரசாங்கம் இன்று  கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் விவசாய சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் கூறி உள்ளனர். 

    இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால், 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×