search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்த ராய்
    X
    நித்யானந்த ராய்

    ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருந்து தப்பித்து பீகாரில் தஞ்சமடைந்து விடுவார்கள் - பாஜக தலைவர் பேச்சு

    பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருந்து தப்பித்து பீகாரில் தஞ்சமடைந்து விடுவார்கள் என பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தின் சட்டமன்றத்தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ம் தேதி, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டணியில் மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களில் போட்டியிடுகின்றன.

    இதனை எதிர்கொள்ள ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி தனது கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. அதன்படி, மொத்தமுள்ள 243 இடங்களில் 122 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு, 121 இடங்களில் பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்டது. 

    இதற்கிடையில், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பிரசார யூக்திகளை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியின் அமைச்சரவையில் மந்திரி பதவி வகிப்பவரும், பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நித்யானந்த ராய் தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    வைஷாலி நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார பேரணி நிகழ்ச்சியில் பேசிய பீகார் மாநில உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நித்யானந்த ராய், ’நடைபெற உள்ள பீகார் சட்டமனற தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் அங்கிருந்து வெளியேறி பீகாரில் தஞ்சமடைந்து விடுவார்கள்.
    அவ்வாறு நடைபெற தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது’ என்றார் 

    Next Story
    ×