search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுடன் எடியூரப்பா நடத்திய பேச்சுவார்த்தை
    X
    விவசாயிகளுடன் எடியூரப்பா நடத்திய பேச்சுவார்த்தை

    வேளாண் மசோதாக்கள் தொடர்பான விவகாரம்: விவசாயிகளுடன் எடியூரப்பா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

    வேளாண் மசோதாக்கள் தொடர்பான விவகாரத்தில் விவசாயிகளுடன் எடியூரப்பா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. திட்டமிட்டபடி வருகிற 28-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் நில சீர்திருத்த சட்ட திருத்தம், மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கண்டித்து வருகிற 28-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களின் ஐக்கிய போராட்ட குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் மற்றும் பசுமை படை தலைவர் படகலபுரா நாகேந்திரா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கர்நாடக அரசின் நில சீர்திருத்த சட்ட திருத்த மசோதா, தொழிலாளர் நல சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். இதை ஏற்க முதல்-மந்திரி மறுத்துவிட்டார். அதே நேரத்தில் சில திருத்தங்களை செய்வதாக உறுதியளித்தார். இதை விவசாயிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. அதனால் திட்டமிட்டபடி வருகிற 28-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். முதல்-மந்திரியுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விவசாய சங்க பிரதிநிதிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக அரசின் நில சீர்திருத்த சட்ட திருத்தம், வேளாண் சந்தைகள் சட்ட திருத்தம், தொழிலாளர் நல சட்ட திருத்த மசோதாக்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரானது. அதனால் அந்த சட்ட திருத்த மசோதாக்களை கைவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது. மேலும் மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கர்நாடக அரசு எதிர்க்க வேண்டும். மேலும் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவையும் மாநில அரசு எதிர்க்க வேண்டும்.

    இந்த மின்சார சட்ட திருத்த மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு பம்புசெட்டுகளுக்கு மீட்டர் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் நாங்கள் விடுத்த கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. பெயருக்கு சில திருத்தங்களை செய்வதாக முதல்-மந்திரி கூறினார். மாறாக மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களை முதல்-மந்திரி எடியூரப்பா பாராட்டி பேசினார். அதனால் எங்களின் ஐக்கிய போராட்ட குழு, ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 28-ந் தேதி திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. எங்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×