search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கர்நாடகத்தில் வருகிற 28-ந் தேதி முழுஅடைப்பு: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

    மத்திய-மாநில அரசுகளின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கர்நாடகத்தில் வருகிற 28-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
    பெங்களூரு:

    மத்திய அரசு வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்களை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.

    இதன் மூலம் வேளாண்மை சந்தைகளில் தனியார் நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. விவசாயத்துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது.

    ஆனால் இந்த மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்தால் அவை விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று கூறி அவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மசோதாக்களை கண்டித்து கர்நாடகம், தமிழ்நாடு, அரியானா, பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    விவசாயிகள் கடந்த 21-ந் தேதி பெங்களூருவில் பெரிய அளவில் ஊர்வலம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக சுதந்திர பூங்காவில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு நடத்துவது குறித்து விவசாயிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கு சில சங்கங்கள் ஆதரவு வழங்கவில்லை. அதனால் அந்த ஆலோசனையை போராட்டம் நடத்தும் விவசாயிகள் கைவிட்டனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கு ஆதரவாக கர்நாடக அரசு வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை கர்நாடக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சுமார் 29 விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பெங்களூருவில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஐக்கிய விவசாய சங்கங்கள் போராட்ட குழு என்ற அமைப்பை உருவாக்கி அதன் சார்பில் போராட முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இந்த குழு சார்பில் மத்திய-மாநில அரசுகளின் வேளாண்மை மசோதாக்களை கண்டித்து வருகிற 28-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதுகுறித்து கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறியதாவது:-

    மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. இந்த மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்தால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. தங்கள் அரசு விவசாயிகளுக்கு ஆதரவான அரசு என்று கூறிய பிரதமர் மோடி, இப்போது விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார்.

    அதனால் அந்த மசோதாக்களை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் போராட்ட குழு சார்பில் வருகிற 28-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி இந்த முடிவு எடுத்துள்ளோம். அன்றைய தினம் நாங்கள் பெங்களூருவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.

    இவ்வாறு கோடிஹள்ளி சந்திரசேகர் கூறினார்.
    Next Story
    ×