search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வழக்கமான ரெயில்களை விட‘குளோன்’ ரெயில்கள் 3 மணி நேரத்துக்கு முன்னதாக போய் சேரும் - ரெயில்வே அதிகாரி தகவல்

    ‘குளோன்’ ரெயில் என்று அழைக்கப்படும் ரெயில்கள் சேர வேண்டிய இடங்களுக்கு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்னதாக போய் சேரும் என மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பயணிகள் நெரிசல் மிகுந்த தடங்களில் வழக்கமான ரெயிலைப்போல மற்றொரு ரெயிலை இயக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ‘குளோன்’ ரெயில் என்று அழைக்கப்படும் இந்த ரெயில்கள் வழக்கமான ரெயில் புறப்படுவதற்கு முன்னதாக புறப்பட்டு, சேர வேண்டிய இடங்களுக்கு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்னதாக போய் சேரும் வகையில் திட்டமிட்டு இருப்பதாக மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அதிக வேகத்தில் செல்லும் இந்த ரெயில்களுக்கு நிறுத்தங்கள் குறைவாகவே இருக்கும் என தெரிவித்த அவர், இந்த ரெயில்கள் அடிப்படையில் முற்றிலும் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளை கொண்டிருக்கும் எனவும், 18 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில்களில் ஹம்சாபர் ரெயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறினார்.

    இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 19-ந்தேதி காலையில் தொடங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக 40 ரெயில்கள் (20 ஜோடி) இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ரெயில்கள் அனைத்தும் பீகார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இயக்கப்படுகின்றன.

    காத்திருப்போர் பட்டியல் பயணிகள், கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடுவோர் மற்றும் அவசர பயணம் மேற்கொள்வோருக்கு இந்த ரெயில்கள் வரப்பிரசாதமாக அமையும் எனவும் அந்த அதிகாரி கூறினார். ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கும் இந்த கொரோனா காலத்தில் பயணிகளின் தேவையை இது பூர்த்தி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×