search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ரெயில்வே
    X
    இந்திய ரெயில்வே

    167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்

    ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாயை விட அதிகமாக ‘ரீபண்ட்’ கொடுத்துள்ளது, 167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதியில் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு சேவைகள் தளர்த்தப்பட்டாலும், ரெயில் சேவை காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், அவற்றில் பயணம் செய்ய எடுக்கப்பட்ட டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பயணிகள் கட்டணத்தை திரும்பப் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ‘தகவல் அறியும் உரிமை’ சட்டம் மூலமாக ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதில் மூலம் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், மே, ஜூன் என முதல் காலாண்டில், டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாயை விட அதிகமாக ‘ரீபண்ட்’ தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பயணிகள் பிரிவு வருவாய் எதிர்மறையாக, அதாவது ‘மைனஸ்’ ஆக பதிவாகி உள்ளது.

    167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

    கடந்த ஏப்ரல் மாதம், வருவாயை விட அதிகமான ‘ரீபண்ட்’ கொடுக்கப்பட்டதால், ‘மைனஸ்’ ரூ.531 கோடியே 12 லட்சம் வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம், ‘மைனஸ்’ ரூ.145 கோடியே 24 லட்சம் வருவாயும், ஜூன் மாதம் ‘மைனஸ்’ ரூ.390 கோடியே 60 லட்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ‘மைனஸ்’ ரூ.1,066 கோடி ஆகும்.

    அதே சமயத்தில், சரக்கு ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதால், அவற்றின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் ரூ.5 ஆயிரத்து 744 கோடியும், மே மாதம் ரூ.7 ஆயிரத்து 289 கோடியும், ஜூன் மாதம் ரூ.8 ஆயிரத்து 706 கோடியும் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

    ஆனால், கடந்த ஆண்டு இதே மாதங்களில் கிடைத்த வருவாயை விட இது குறைவுதான்.

    புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, ரெயில்வே செய்தித்தொடர்பாளர் டி.ஜே.நரைன் கூறியதாவது:-

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மேற்கண்ட 3 மாதங்களில் குறைவான டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டன. பதிவான டிக்கெட்டுகளின் மதிப்பை விட ‘ரீபண்ட்’ தொகையின் மதிப்பு அதிகம் என்பதையே ‘மைனஸ்’ எண்ணிக்கை காட்டுகிறது.

    இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட கடந்த 2 வாரங்களில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதனால், பயணிகள் வருவாய் இழப்பு, சரக்கு ரெயில்கள் வருவாய் மூலம் ஈடுகட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×