search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்
    X
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்

    விமான விபத்து: உறைய வைக்கும் கடைசி நொடி குறித்து விளக்கும் உயிர்பிழைத்த பயணிகள்

    கோழிக்கோடு விமான விபத்தில் உயிர்பிழைத்த பயணிகளின் கடைசி நொடியின் பயங்கரமான அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
    துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன் வந்த விமானம், நேற்று இரவு தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில், 10 குழந்தைகள் உட்பட 184 பயணிகள், 4 விமானப் பணிப்பெண்கள், 2 விமானிகள் என 190 பேர் பயணித்தனர். கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, விமானியின் கட்டுப்பாட்டை மீறி ஓடு பாதையிலிருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விமானம் இரண்டாகப் பிளந்தது. இந்த விமான விபத்தில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 149 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    விமான விபத்துக்கள்ளான அந்த கடைசி நொடியின் சம்பவத்தை உயிர் பிழைத்தவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

    ராம்ஷாத் என்பவர் மனைவி மற்றும் மகளுடன் வந்துள்ளார். அவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மனைவி, மகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர். விபத்து குறித்து அவர் கூறுகையில் ‘‘விமானம் குலுங்கியது என்பதை தவிர, அங்கு என்ன நடந்தது என்பதை எங்களால் உணர முடியவில்லை’’ என்றார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஷ்ரப், ‘‘நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

    மற்றொருவர் ‘‘விமானம் விபத்துக்குள்ளானதும், அவரசக்கால கதவு திறக்கப்பட்டது. தங்கள் உயிரை பாதுகாக்க பயணிகள் அது வழியாக வெளியே குதித்தனர்’’ என்றார்.

    சிறிய காயத்துடன் உயிர் பிழைத்த விஜய் மோகன் கூறுகையில் ‘‘அது ஒரு கொடூர கனவு. கனவு கண்டு கொண்டிருந்தேனா?. அதிலேயே வாழ்ந்து கொண்டிருந்தேனா? எனத் தெரியவில்லை. விமானம் குலுங்கியபோது கண்ணை திறந்து பார்க்கும்போது விமான பாகங்கள் உடைந்து சிதறியிருந்தன ’’ என்றார்.

    விஜய் மோகன் மனைவி ஐசியூ-வில் உள்ளார். அவரது மகனை பார்க்க கடந்த டிசம்பர் மாதம் துபாய் சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் இருந்த நிலையில், தற்போது திரும்பிய நிலையில் விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

    ரியாஸ் என்பவர் ‘‘நான் பின்னால் உள்ள சீட்டில் இருந்தேன். மிகப்பெரிய அளவில் சத்தம் கேட்டது. அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை’’ என்றார்.

    பாத்திமா என்பவர்  ‘‘விமானம் மிகவும் பலமாக தரையில் மோதி முன்னோக்கிச் சென்றது.’’ என்றார்.

    ஆஷிக் என்பவர், ‘‘தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காயம் அடைந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.’’ என்றார்.

    ‘‘காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த தன்னார்வ தொண்டர்களின் பணி ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது. ஒரு பக்கம் கொரோனா அச்சம், ஒரு பக்கம் கனமழை. அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் சிறப்பாக செயல்பட்டனர்’’ என்று சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஷிம்னா ஆசீர் தெரிவிதார்.
    Next Story
    ×