search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த கர்ப்பிணி யானை
    X
    உயிரிழந்த கர்ப்பிணி யானை

    யானையை கொன்றவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு

    கேரளாவில் யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
    திருவனந்தபுரம்:

    கடவுளின் தேசம் என புகழப்படும் கேரளாவில் யானைகளும் தெய்வமாக வணங்கப்படுகிறது.

    கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் விழாக்களில் தெய்வங்களின் சிலைகளை ஏந்தி செல்லும் பொறுப்பு யானைகளுக்கே வழங்கப்படும். இதனால் கேரளாவில் எப்போதும் யானைகளுக்கு தனி மரியாதை உண்டு. கேரளாவின் அரசு இலச்சினையிலும் 2 யானைகள் இடம் பெற்றிருக்கும். இப்படி யானைகளுக்கு மரியாதை அளிக்கும் கேரளாவில் மனிதாபிமானம் அற்ற முறையில் ஒரு யானையை வெடி வைத்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

    கோவில் யானைகளுக்கு அளிக்கப்படும் மரியாதை காட்டு யானைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவைகள் விவசாயிகளின் நிலங்களை நாசப்படுத்தி பயிர்களை சேதப்படுத்துவதால் அவற்றை விரட்டுவதிலேயே ஆர்வம் காட்டுவார்கள்.

    அப்போதும் ஒலி எழுப்பியும், வெடிகளை வெடிக்க வைத்தும் விரட்டுவார்கள். சில நேரங்களில் கும்கி யானைகள் மூலமும் காட்டு யானைகளை துரத்தும் பணி நடக்கும். இவையெல்லாம் சாதாரணமாக நடக்கும் செயல்கள். ஆனால் கேரளாவின் திருவனந்தபுரம் வனப்பகுதிக்குட்பட்ட கூத்தப்பாடம் கிராமத்தில் புகுந்த காட்டு யானைக்கு நடந்த சம்பவம்தான் வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    மே மாதம் கடைசி வாரத்தில் வன அதிகாரி ஒருவர் இங்குள்ள காட்டு பகுதிக்கு ரோந்து சென்றார். அப்போது காட்டாறு ஒன்றில் யானை ஒன்று பிளிறியபடி நின்றது. தும்பிக்கையை உயர்த்தியபடி நீரில் மூழ்குவதும், பின்னர் எழுந்து நின்று பிளிறுவதுமாக இருந்தது.

    யானைகளை பற்றி நன்கு அறிந்திருந்த வன அதிகாரி, அந்த யானைக்கு ஏதோ காயம் இருக்கிறது, அதனால்தான் அது வலியில் துடிக்கிறது என்பதை புரிந்து கொண்டார். இதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள் அனுமதி பெற்று கும்கி யானைகளை வரவழைத்தார்.

    அந்த யானைகள் மூலம் காட்டாற்றில் கதறி கொண்டு நின்ற காட்டு யானையை மீட்க முயன்றார். மே மாதம் 27-ந்தேதி வரை அந்த யானை தண்ணீரை விட்டு வெளியே வரவில்லை. ஆற்றுக்குள்ளேயே நின்று கொண்டிருந்த யானை திடீரென ஒரு பக்கமாக சரிந்து விழுந்தது. பின்னர் எழுந்திருக்கவே இல்லை.

    கும்கிகள் உதவியுடன் வன அதிகாரி காட்டு யானையை கரைக்கு தூக்கி வந்தார். கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் யானையை பரிசோதித்தனர். அப்போது யானையின் வாய் பகுதி வெந்துபோய் புண்ணாகி இருப்பதும், இதனால் உணவு அருந்த முடியாமல் வேதனையில் தவித்து யானை இறந்திருப்பதும் தெரிய வந்தது. அந்தயானை கர்ப்பமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வன அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் யானை விரும்பி உண்ணும் அன்னாசி பழத்தில் யாரோ மர்மநபர்கள் வெடி மருந்தை மறைத்து வைத்து உண்ண கொடுத்ததும், யானை உண்ண தொடங்கியதும் வெடி, வெடித்து யானையின் வாய் பகுதி சிதைந்து போனதும் தெரிய வந்தது.

    காட்டு யானைக்கு நடந்த அநியாயம் பற்றி அந்த அதிகாரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதமாக்கும் யானைகளை விரட்ட எத்தனையோ வழிகள் இருக்க இப்படியா... அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானையை கொல்வது என்று தன் வேதனையை பதிவிட்டிருந்தார்.

    வன அதிகாரியின் இந்த பதிவு மின்னல் வேகத்தில் நாடு முழுவதும் பரவியது. வன ஆர்வலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். யானையை கொன்றவர்கள் மனிதர்கள் அல்ல... மனித மிருகங்கள் என்று பதிவிட்டனர்.

    இவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பதை விட மறக்க முடியாத தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    யானை கொல்லப்பட்ட தகவல் முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்திற்கும் சென்றது. அவர், உடனே வனத்துறை மந்திரியை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். யானையை கொன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

    யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காடு மண்டல வன அதிகாரி சுனில்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    விலங்குகள் ஆர்வலரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மேனகாகாந்தியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று வனத்துறை செயலர் மற்றும் மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் கூறி உள்ளார். இச்சம்பவம் குறித்து வயநாடு தொகுதியின் எம்.பி. ராகுல்காந்தி இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Next Story
    ×