search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை ரோஜா
    X
    நடிகை ரோஜா

    ஊரடங்கை மீறியதாக வழக்கு- நடிகை ரோஜா உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

    ஊடரங்கு விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ரோஜா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    அமராவதி:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், மக்கள் முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்எல்எக்கள் மக்களை ஒன்றுதிரட்டி நிவாரணப் பொருட்கள் வழங்கியதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    ‘நகரி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி, பாலமனேரு எம்எல்ஏ வெங்கட கவுடா, நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை எம்எல்ஏ சஞ்சீவையா, குண்டூர் மாவட்டம் சிலாகலூரிபேட்டை எம்எல்ஏ விடுதலை ரஜினி ஆகியோர் ஊரடங்கு விதிமுறையை மீறி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். 

    இந்த மனு மீது காணொலி மூலமாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட ரோஜா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விதிமுறைகளை  மீறிய எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி அரசுக்கும் உத்தரவிட்டனர். 

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஊரடங்கை மீறி பொதுக்கூட்டங்கள் நடத்தியதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. எம்எல்ஏக்கள் நடத்திய பொதுக்கூட்டங்களால் ஓரிரு தொகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×