search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்கூட்டரில் மகனை அழைத்து வரும் தாய்.
    X
    ஸ்கூட்டரில் மகனை அழைத்து வரும் தாய்.

    1400 கி.மீ. ஸ்கூட்டரில் சென்று மகனை அழைத்து வந்த தாய்

    ஊரடங்கு உத்தரவு காரணமாக ஊருக்கு வர முடியாமல் தவித்த மகனை 1400 கி.மீ. ஸ்கூட்டரில் பயணம் செய்து தாய் அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் அருகே உள்ள போதான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரஷியாபேகம் (வயது 48). உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

    மூத்த மகன் என்ஜினீயரிங் முடித்துள்ளார். 2-வது மகன் நிசாமுதின் (வயது 19) பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.

    நிசாமுதின் கடந்த 12-ந்தேதி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ரகமதாபாத்துக்கு நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் 24-ந்தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தார். அவரை ஊருக்கு திரும்ப அழைத்து வருவதற்கு தாயார் ரஷியாபேகம் பல முயற்சிகளையும் மேற்கொண்டார்.

    காரில் சென்று அழைத்து வருவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    எனவே ஸ்கூட்டரில் சென்று அழைத்து வரலாம் என்ற முடிவுக்கு வந்தார். தனது மூத்த மகனை ஸ்கூட்டரில் அனுப்பி அழைத்து வரலாம் என்று முதலில் நினைத்தார்.

    ஆனால் போலீசார் அவரை அனுமதிக்கமாட்டார்கள் என கருதிய ரஷியாபேகம் அவரே ஸ்கூட்டரில் சென்று அழைத்து வர முடிவு எடுத்தார். இதற்காக உள்ளூர் போலீஸ் டி.எஸ்.பி.யிடம் ஒரு அனுமதி கடிதம் வாங்கினார்.

    நிசாமாபாத்துக்கும் நெல்லூருக்கும் இடைப்பட்ட தூரம் 700 கி.மீ. ஆகும். அங்கு செல்வதற்காக கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார். மறுநாள் பிற்பகலில் நெல்லூரை சென்றடைந்தார்.

    மகனை அழைத்துக் கொண்டு உடனேயே அங்கிருந்து புறப்பட்டார். புதன்கிழமை மாலை நிசாமாபாத் வந்து சேர்ந்தார். அவர் மொத்தம் 1400 கி.மீ. தூரத்திற்கு ஸ்கூட்டரை ஓட்டி வந்திருந்தார். இதுபற்றி ரஷியாபேகம் கூறும்போது, எனக்கு வேறு வழி தெரியாததால் ஸ்கூட்டரிலேயே சென்று அழைத்துவர முடிவு செய்தேன். சிறிய வாகனத்தில் செல்வது எனக்கு கஷ்டமாக இருந்தது. என் நிலையை அறிந்து போலீசாரும் எனக்கு உதவினார்கள். ஆட்கள் நடமாட்டமே இல்லாத சாலையில் இரவு நேரத்தில் கூட பயணம் செய்தேன். பல இடங்களில் அடர்ந்த காடுகள் வழியாக வரவேண்டியது இருந்தது. நான் ஏற்கனவே சப்பாத்தி தயார் செய்து எடுத்து சென்றேன். அதை சாப்பிட்டுக் கொண்டே ஊர் திரும்பினோம் என்று கூறினார்.
    Next Story
    ×