search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    பெண்களை ஆபாசமாக திட்டிய நீதிபதியின் வேலை பறிப்பு- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

    பெண்களை ஆபாசமாக திட்டிய நீதிபதிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட்டு அவரை கட்டாய ஓய்வில் அனுப்பும்படி உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் முதன்மை நீதிபதியாக இருப்பவர் அருண்குமார் குப்தா. இவர் இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு ராஞ்சியில் உள்ள நிர்வாக அதிகாரி பயிற்சி மையத்தில் துணை இயக்குனராக இருந்து வந்தார்.

    அங்கு மாநில சிவில் சர்வீசில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பது வழக்கம். அதில் அருண்குமார் குப்தா பாடம் நடத்துவார்.

    இந்த நேரத்தில் அவர் பெண் பயிற்சியாளர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக யாரும் பயன்படுத்த முடியாத மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பேசுவது போன்றவற்றிலும் ஈடுபட்டார்.

    ஒரு தடவை ஆடைகளுக்கு இஸ்திரி போடுபவர் சரியாக துணியை அயர்ன் செய்யவில்லை என்ற காரணத்தினால் அவரது தலையில் சூடான இஸ்திரி பெட்டியை வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

    இதன்பிறகு அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நீதிபதி ஆனார். ஆபாசமாக திட்டியது தொடர்பாக பெண்கள் 10 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அருண்குமார் குப்தா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார்.

    அதன் விசாரணை நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக்குப்தா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அவர்கள் ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்து நீதிபதியை கட்டாய ஓய்வில் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல செயல்படக்கூடாது. அவர்கள் அந்த பொறுப்புக்கு லாயக்கற்றவர்கள். எனவே அவர் பதவியில் தொடர முடியாது என்று கூறினார்கள்.

    Next Story
    ×