search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் நடந்த வன்முறை
    X
    டெல்லியில் நடந்த வன்முறை

    இனி சொந்த வீட்டுக்கு போகமாட்டோம் - டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் கண்ணீர் பேட்டி

    டெல்லியில் நடந்த கலவரத்தால் மனைவி மற்றும் குழந்தைகள் பீதியில் இருக்கிறார்கள் எனவும் இனி ஒரு போதும் சொந்த வீட்டுக்கு போகமாட்டோம் எனவும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நடந்த கலவரத்தில் பிரிஜ்பூரி என்ற இடத்திலும் வன்முறை வெடித்தது. அங்கு பல கடைகள், வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது.

    அதில் ஜக்ரோசன் லால் என்பவருடைய கடையும் எரிந்து நாசமானது. அவருடைய வீடு தாக்கப்பட்டது. தற்போது அவரது குடும்பத்தினர் அந்த இடத்தை காலி செய்துவிட்டு புராரி என்ற இடத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

    கலவரம் நடந்தபோது தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஜக்ரோசன் லால் கூறியதாவது:-

    நாங்கள் பிரிஜ்பூரியில் கஷ்டப்பட்டு கடை ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதே பகுதியில் சொந்த வீடும் இருந்தது. நானும் எனது மகன் அசோக்லாலும் கடையை கவனித்து கொண்டோம்.

    சம்பவம் நடந்தபோது அருகில் உள்ள முஸ்தபா பாத்தில் இருந்து ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நாங்கள் கடை வைத்துள்ள பகுதிக்கு வந்தது. அவர்கள் அங்கிருந்த கடைகளை எல்லாம் தாக்கினார்கள்.எனது கடைக்கு தீவைத்தனர்.

    நானும் எனது மகனும் கலவர கும்பலை பார்த்ததுமே கடையின் ‌ஷட்டரை மூடிவிட்டு உள்ளே இருந்தோம்.

    கதவை உடைப்பதற்கு அவர்கள் 3 மணி நேரமாக முயற்சித்தார்கள். நாங்கள் பீதியில் உள்ளே சிக்கி தவித்தோம். அதன்பிறகு பின் பக்க வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டோம். இந்த நேரத்தில் அவர்கள் கடைக்கு தீவைத்தார்கள். இதில் கடை முற்றிலும் நாசமாகிவிட்டது.

    இதற்குள் எங்கள் வீட்டையும் தாக்கி நாசப்படுத்தி விட்டனர். இனி அங்கு வசிக்க முடியாது என்ற நிலையில் நாங்கள் அனைவரும் காலி செய்து விட்டு உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

    எனது மனைவி, குழந்தைகள் என அனைவரும் கடுமையான பீதியில் இருக்கிறார்கள். நாங்கள் இனி அந்த வீட்டுக்கு செல்வதற்கு விரும்பவில்லை. அங்கு சென்றால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மறுபடியும் இதேபோல கலவரம் வரலாம் என்று அஞ்சுகிறோம்.

    எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. எனவே வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×