search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா
    X
    நித்யானந்தா

    கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்

    கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    பெங்களூர்:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

    குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நித்யானந்தா மீது அகமதாபாத் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஏற்கனவே கர்நாடகவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கு உள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    அவர் ஈகுவெடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என பெயர் சூட்டி தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கியதாக தகவல்கள் வெளியாகியது.

    தனது கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்ட அவர் தன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அவரது ஆசிரமத்தில் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்ட இரு இளம் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரிய ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது நித்யானந்தா வெளிநாடு தப்பி சென்று விட்டதை போலீசார் உறுதிபத்தினர்.

    இதைத்தொடர்ந்து சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பேரில் சி.பி.ஐ. மூலம் சர்வதேச போலீசை குஜராத் போலீசார் அணுகி நித்யானந்தாவை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து தகவல் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் சர்வதேச போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச போலீசாரின் அதிகாரத்துக்குட்பட்ட 150 நாடுகளில் நித்யானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    அவ்வாறு நித்யானந்தாவின் இருப்பிடம் தெரிந்ததும் அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசார் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிப்பார்கள்.

    இதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக குஜராத் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது நித்யானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ‘பெஸிஸ்’ பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதை போலீஸ் அதிகாரிகள் யாரும் உறுதிபடுத்தவில்லை.

    நித்யானந்தா புதிய பாஸ்போட்டை பயன்படுத்தி எங்கும் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறிய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு எதிராக ‘புளூ கார்னர்‘ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது அனைத்து நகர்வுகளும் முழுமையாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×