search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை நகரம்
    X
    மும்பை நகரம்

    மும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் செயல்படும்- மந்திரிசபை ஒப்புதல்

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மால்கள், தியேட்டர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் கொள்கைக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
    மும்பை:

    வர்த்தக நகரமான மும்பையில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவித்திருந்தார். 

    குடியிருப்பு அல்லாத பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்படலாம். இது கட்டாயம் இல்லை. உரிமையாளர்கள் விருப்பத்தை பொருத்தது என்றும் அவர் கூறியிருந்தார். 

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநில மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மும்பையில் 27-ம் தேதி முதல் 24 மணி நேரமும் மால்கள், திரையரங்குகள் மற்றும் கடைகளை திறந்து வைக்கும் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    ஆதித்ய தாக்கரே

    அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-

    லண்டனில் இரவு நேர வர்த்தகத்தால் பொருளாதாரம் 5 பில்லியன் பவுண்ட் என்ற அளவில் உள்ளது. இதேபோல் மகாராஷ்டிராவுக்கு கூடுதல் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக அரசாங்கத்தின் இந்த முடிவு உதவியாக இருக்கும். 

    கடைகள், மால்கள், உணவங்கள் இரவு நேரங்களில் திறந்து வைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. நல்ல தொழில் செய்து கூடுதல் லாபம் ஈட்ட முடியும் என்று நினைப்பவர்கள், இரவு முழுவதும் தங்கள் நிறுவனங்களைத் திறந்து வைக்கலாம்.

    பாந்த்ரா-குர்லா வளாகத்திலும், நரிமன் பாயிண்டிலும் உணவு வாகனங்களுக்காக ஒரு பாதை திறக்கப்படும். உணவு ஆய்வாளர்கள் அந்த கடைகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள். திடக்கழிவு மேலாண்மை, டெசிபல் வரம்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த விதிகள் மீறப்பட்டால், அந்த நிறுவனங்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும்.

    காவல்துறையினர் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். ஏனென்றால் அதிகாலை 1.30 மணிக்குப் பிறகு, கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டதா என்பதைச் சோதிப்பதே இதுவரை அவர்களின் வேலையாக இருந்தது. ஆனால் இப்போது சட்டம் ஒழுங்கில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்த முடியும். கலால் விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. அதிகாலை 1.30 மணிக்கு விடுதிகள் மற்றும் பார்கள் வழக்கம் போல் மூடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×