search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்ராஜை கோர்ட்டில் இருந்து போலீசார் அழைத்து சென்றனர்.
    X
    தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்ராஜை கோர்ட்டில் இருந்து போலீசார் அழைத்து சென்றனர்.

    ஜார்க்கண்டில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

    ஜார்க்கண்டில் கடந்த 2016 ம் ஆண்டு கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள ஒர்மன்ஜி பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி வீட்டில் எரிந்த நிலையில் கிடந்தார்.

    பிரேத பரிசோதனையில் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். எனினும் கொலையில் துப்பு துலங்க வில்லை.

    மாணவி கொலையை கண்டித்து ராஞ்சியில் மாணவ-மாணவிகள் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். இதைத் தொடர்ந்து இவ்வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சி.பி.ஐக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டது.

    சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து மாயமான, அதேபகுதியை சேர்ந்த ராகுல்ராஜ் (23) மீது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

    அவன் அப்போது மற்றொரு வழக்கில் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அவன் மீது 5 வழக்குகள் இருந்தது. ஜூன் மாதம் 23-ந் தேதி சி.பி.ஐ. அவனை காவலில் எடுத்து ராஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது.

    ராகுல் ராஜின் ரத்த மாதிரி, கொலை செய்யப்பட்ட மாணவியின் கை, கால்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ.மாதிரியுடன் ஒத்துப்போனது. பின்னர் அக்டோபர் 25-ந் தேதி ராஞ்சி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    நவம்பர் 8-ந் தேதி தொடங்கிய வழக்கு விசாரணை தினந்தோறும் நடத்தப்பட்டது. அதே மாதத்தில் விசாரணை முடிந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராகுல்ராஜ் குற்றவாளி என சிறப்பு கோர்ட்டு உறுதி செய்தது.

    இந்த வழக்கில் நீதிபதி ஏ.கே.மிஷ்ரா நேற்று தீர்ப்பை அறிவித்தார்.

    அப்போது ராகுல்ராஜுக்கு தூக்கு தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×