search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லீலா சாம்சன்
    X
    லீலா சாம்சன்

    ரூ.7.02 கோடி முறைகேடு: கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

    சென்னையில் நாடக அரங்கம் புனரமைப்பு பணியில் 7.02 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டிம் பழங்கலைகளான இசை, நடனம் உள்ளிட்ட அருங்கலைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் சென்னை திருவான்மியூரில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் பிரபல பரதநாட்டியக் கலைஞரான ருக்மனி தேவி அருண்டேல் என்பவரால் 1936-ம் ஆண்டில் ‘கலாஷேத்ரா’ நாட்டியப் பள்ளி தொடங்கப்பட்டது.

    கலாஷேத்ராவின் இயக்குநராக பிரபல பரதநாட்டியக் கலைஞரான லீலா சாம்சன் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டபோது சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    கலாஷேத்ராவில் நடனப் பயிற்சி

    2005 முதல் 2012 வரை கலாஷேத்ராவின் இயக்குநராக பதவி வகித்த லீலா சாம்சன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தகுதியற்ற ஆட்களை பணியமர்த்தியதாகவும், தேவையற்ற வகையில் ஏராளமான பணத்தை செலவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    லாபம் பெறும் நோக்கத்தில் நெருக்கமான சிலருக்கு விதிமுறைகளை மீறி பல ஒப்பந்தங்களை அளித்ததாகவும் கலாஷேத்ரா முன்னாள் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

    இதனையடுத்து, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகத்தில் லீலா சாம்சன் பதவிக்காலத்தில் நிகழ்ந்த பணப் பரிவர்த்தனை மற்றும் வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

    இதற்கிடையில், இவரது பதவிக்காலத்தில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய அரசின் கலாச்சார மேம்பாட்டு துறை கண்காணிப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில், சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் 'கூத்தம்பலம்’ என்ற பெயரில் நாடக அரங்கம் கட்டும் பணியில் 7.02 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கலாஷேத்ரா முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இவருடன் கலாஷேத்ரா முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி டி.எஸ்.மூர்த்தி, கணக்கு அதிகாரி எஸ்.ராமச்சந்திரன், பொறியியல்துறை அதிகாரி வி.ஸ்ரீனிவாசன், அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட சென்னை என்ஜினீயரிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பத்மஸ்ரீ பட்டம் பெற்ற ஷீலா சாம்சன், இதற்கு முன்னர் மத்திய அரசின் ‘சங்கீத் நாடக் அகாடமி’ (இசை நடனக் கழகம்) மற்றும் மத்திய சினிமா தணிக்கை குழு ஆகியவற்றின் தலைவராகவும் முன்னர் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×