search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரம்
    X
    மரம்

    உத்தர பிரதேசத்தில் ராணுவ தளவாட கண்காட்சிக்காக 64 ஆயிரம் மரங்களை வெட்ட முடிவு

    உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ராணுவ கண்காட்சிக்காக கோமதி நதிக்கரையில் உள்ள 64 ஆயிரம் மரங்களை வெட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    லக்னோ: 

    நமது நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி திறனையும், ராக்கெட் உற்பத்தி திறனையும் உலகுக்கு பறை சாற்றும் விதமாக ராணுவ  தளவாட கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் 10-வது ராணுவ தளவாட கண்காட்சி மிகப்பிரமாண்டமாக  நடைபெற்றது.  

    முற்றிலும் நமது நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள்  கண்காட்சியில் இடம்பெற்றன. அவற்றின் செய்முறை விளக்க காட்சிகள் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. அவ்வகையில்  11-வது ராணுவ தளவாட கண்காட்சி உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் 8-ம்  தேதி வரை நடைபெற உள்ளது.  

    இந்நிலையில், அக்கண்காட்சியை முன்னிட்டு தலைநகர் லக்னோவில் உள்ள கோமதி நதிக்கரையில் இருந்து குறிப்பிட்ட பகுதி வரை 64  ஆயிரம் மரங்களை வெட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

    ‘ராணுவ தளவாட கண்காட்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. குளிர்காலம் வருவதால் அங்குள்ள மரங்களை  பெயர்த்து வேறு எங்காவது நடுவது கடினம். அவ்வாறு மரங்களை வேறு இடத்தில் நட்டாலும் அது பயனளிக்காது. எனவே கண்காட்சி  முடிந்த பின் அப்பகுதிகளில் புதிய மரக்கன்றுகள் நடுவதற்காக 59 லட்சம் ரூபாய் நிதி கோரி நகராட்சி ஆணையருக்கு கடிதம்  எழுதப்பட்டுள்ளது’ என லக்னோ நகர மேம்பாட்டு ஆணைய செயலர் தெரிவித்தார். 

    கடந்த இரண்டு மாதங்களில் லக்னோவில் அபாயகரமான காற்று மாசுபாடு இருந்த நிலையில், மரங்களை வெட்ட முடிவு செய்த மாநில  அரசின் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் தூய்மையான சுற்றுச்சூழலை எதிர்பார்க்கும் பொதுமக்களுக்கு கடுமையான ஏமாற்றம் என  இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×