search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தபய ராஜபக்சே
    X
    கோத்தபய ராஜபக்சே

    இந்தியா- இலங்கை இடையே நல்லுறவு மேம்படும்: கோத்தபய ராஜபக்சே

    இந்தியா- இலங்கை இடையே நல்லுறவு மேம்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவை இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட கோத்தபய ராஜபக்சே அதிபரானதும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியா வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று காலை வெளியுறவுதுறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கை குலுக்கி வரவேற்றனர்.

    அதைதொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு அவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். முன்னதாக தன்னுடன் வந்த அதிகாரிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு கோத்தபய ராஜபக்சே அறிமுகம் செய்து வைத்தார்.

     

    கோத்தபய ராஜபக்சே,  பிரதமர் மோடி

    அதன்பிறகு நிருபர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2 நாட்டு மக்களின் நலனுக்காக பாதுகாப்பு மற்றும் அனைத்து பிரச்சினைகளிலும் இந்தியாவுடன் இலங்கை இணைந்து பணியாற்றும். இந்தியாவுடன் ஆன உறவு மேலும் மேம்படும். அதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.

    எனது எதிர்பார்ப்புகள் மிகப்பெரிய அளவில் உள்ளது. அதற்காக 2 நாட்டு உறவுகளை அதிக அளவில் மேம்படுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    டெல்லியில் தங்கியிருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஐதராபாத் பவனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவர்கள் பிரச்சினை, இலங்கை- தமிழர் பிரச்சினை குறித்தும், இரு நாடுகளின் உறவு மேம்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

    Next Story
    ×