search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து கல் எறி சம்பவத்தில் ஈடுபட்ட 765 பேர் கைது

    காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து கல் எறிதல் சம்பவத்தில் ஈடுபட்ட 765 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக மத்திய மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. 

    மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.

    இந்த நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

    அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தொடரின் போது, ஜம்மு-காஷ்மீரில் இதுவரை பதியபட்டுள்ள வழக்குகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான கேள்வி கேட்கப்பட்டது. 

    அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி கிரிஷன் ரெட்டி, 'ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதியில் இருந்து நவம்பர் 15-ம் தேதிவரை கல் எறி சம்பவத்தில் ஈடுபட்டதாக 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    கல் எறிதல் போன்று சட்டம் ஒழுங்கை மீறியதற்காக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை கல் எறி சம்பவத்தில் ஈடுபட்டதாக 361 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

    கோப்பு படம்

    காஷ்மீரில் கல் எறி சம்பவங்கள் அரங்கேற குரியத் போன்ற பிரிவினைவாத அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள் என செயல்படும் நபர்களுமே முக்கிய காரணமாக இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி அளித்த 18 பேர் மீது தேசிய புலனாய்வு குழுவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட தொடக்கத்தில் மிகவும் குறைவாக இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியரின் வருகை எண்ணிக்கையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது நடைபெற்றுவரும் தேர்வில் 99.7 சதவீகிதம் அளவிற்கு மாணவ-மாணவியரின் வருகை உயர்ந்துள்ளது’ என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×