search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த்-பிரீத்தி திருமணத்தின்போது எடுத்த படம்.
    X
    அரவிந்த்-பிரீத்தி திருமணத்தின்போது எடுத்த படம்.

    தேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி

    தேனிலவுக்கு மனாலி சென்றபோது அங்கு பாராகிளைடரில் பறந்த சென்னை புதுமாப்பிள்ளை கீழே விழுந்து பலியானார். மனைவி கண்முன்னே இந்த சோகம் நடந்தது.
    சிம்லா:

    சென்னை அமைந்தகரை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தேனிலவுக்காக இமாசலபிரதேச மாநிலம் மனாலிக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்கான பயண டிக்கெட்டுகள் பதிவு செய்து மனாலி சென்றனர். அங்கு சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    மனாலி அருகே உள்ள டோபி என்ற இடத்தில் பாராகிளைடரில் சுற்றுலா பயணிகள் பறப்பது மிகவும் பிரபலமானது. இதனை பார்த்ததும் அரவிந்த், தானும் அந்த பாராகிளைடரில் பறக்க டிக்கெட் பதிவு செய்தார். அதன்படி நேற்று அரவிந்த் பாராகிளைடர் விமானி ஹரு ராம் என்பவருடன் அதில் பறந்தார். அதை பிரீத்தி தரையில் இருந்து ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

    வானில் பறந்த சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அரவிந்த் பாராகிளைடரில் இருந்து கீழே பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரவிந்த் கீழே விழுந்ததில் பாராகிளைடரும் நிலைதடுமாறியது. இதனால் அவசரமாக கீழே இறங்க முயன்றதில் விமானி ஹரு ராமும் காயம் அடைந்தார். அவர் உடனே குல்லு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குல்லு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். கணவரின் உடலை பார்த்து பிரீத்தி கதறி அழுதார்.

    முதல்கட்ட விசாரணையில் பாதுகாப்பு பெல்ட்டை சரியாக கட்டாததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாட்லிகுஹால் போலீசார் பிரீத்தி புகாரின் பேரில், 336 (உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் அல்லது மற்றவர்களின் தனிப்பாதுகாப்பு), 304 (கொலைக்கு உட்படாத உயிரிழப்பை ஏற்படுத்தும் குற்றம்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாராகிளைடரில் பறப்பது ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர்ந்தது என்றாலும், இதில் ஆபத்தும் நிறைந்துள்ளது. இந்த இடத்திலும் கடந்த காலங்களில் பல விபத்துகள் நடைபெற்றுள்ளன. கடந்த மே மாதம் 18-ந் தேதி இங்கு பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்த அமந்தீப் சிங் சோதி (23) என்ற வாலிபர் பாராகிளைடர் மலையில் மோதியதில் இறந்தார். இங்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×