search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணத்தை திருப்பி கேட்டதால் சயனைடு வி‌ஷம் கொடுத்து 10 பேரை கொன்ற மந்திரவாதி

    மேற்கு கோதாவரியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் சயனைடு விஷம் கொடுத்து 10 பேரை கொன்ற மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
    ஐதராபாத்:

    கேரளாவில் சொத்துக்கு ஆசைப்பட்டு தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை ஜோலி என்ற பெண் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    14 ஆண்டுகளாக உணவில் சிறிது சிறிதாக வி‌ஷம் கலந்து கொடுத்து அவர்களை கொன்றதாக ஜோலி வாக்குமூலம் அளித்திருந்தார். இதை மிஞ்சும் வகையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    மேற்கு கோதாவரியில் உள்ள எலுரு பகுதியை சேர்ந்தவர் வேலங்கி சிம்ஹாத்ரி என்ற சிவா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மோசடியில் ஈடுபட முடிவு செய்த அவர் தன்னிடம் மந்திர சக்திகள் இருப்பதாக கூறி அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.

    தன்னிடம் பணம் கொடுத்தால் மந்திர பூஜைகள் செய்து அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி உள்ளார். இதை நம்பிய சிலர் அவரிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகையை கொடுத்துள்ளனர்.

    தன்னை மந்திரவாதி என மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக வீட்டு அறையில் இரட்டைத் தலை பாம்பு போன்றவற்றை வைத்து பூஜை செய்துள்ளார். தன்னால் நீரழிவு நோயை குணப்படுத்த முடியும் என கூறியும் பலரிடம் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    பல நாட்களாகியும் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டனர்.

    ஒரு சிலரை சமாளித்த சிவா, சிலருக்கு பிரசாதத்தில் சயனைடு வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எந்த காயங்களும் இல்லாதால் அவர்கள் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி உள்ளனர்.

    சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான நாகராஜூ என்பவர் ரூ.2 லட்சம் நகை, பணத்துடன் மாயமாகி விட்டதாக அவரது சகோதரர் வெங்கடரமணா எலுரு போலீசில் புகார் கொடுத்தார். நாகராஜூவின் செல்போன் மற்றும் சில சி.சி.டி.காட்சிகள் மூலம் போலீசார் துப்பு துலக்கினர்.

    இதில் சிவா போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் நாகராஜூவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் தனது பாட்டி, மைத்துனர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நில உரிமையாளர், மத போதகர் உள்பட மொத்தம் 10 பேருக்கு சயனைடு வி‌ஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறினார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த 20 மாதங்களில் இந்த கொலைகளை தனி ஆளாக செய்துள்ளார்.

    இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இவர் இதுவரை ரூ.25 லட்சம் மற்றும் 35 பவுன் நகை மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. சிவாவை கைது செய்த போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களின் நம்பர்கள் இருந்தன.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் சிவா தன்னிடம் பணம் மற்றும் நகை கொடுத்து ஏமாந்த மேலும் 20 பேரை கொலை செய்ய திட்டமிட்டதும் அம்பலமானது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×