search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்முவில் உள்ள தலைமை செயலகம்
    X
    ஜம்முவில் உள்ள தலைமை செயலகம்

    காஷ்மீரில் கவர்னர் ஆட்சிக்கு இடையில் ஜம்முவுக்கு ‘தர்பார் மாற்றம்’

    ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துடன் மாநிலத்துக்கான அந்தஸ்தையும் இழந்து இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் முதன்முதலாக இன்று ‘தர்பார் மாற்றம்’ நடைபெற்றது.
    ஜம்மு:

    இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்கள் காலத்துக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீருக்கு உள்பட்ட பகுதியை ஆண்டுவந்த மகாராஜா குலாப் சிங் என்பவர் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் 1872-ம் ஆண்டில் அறிவித்தார்.

    இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தலைநகரத்தை மாற்றும் நிகழ்வு ‘தர்பார் மாற்றம்’ என்று அழைக்கப்பட்டது. மாநில கவர்னர் மாளிகை உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவது சுமார் 150 ஆண்டுகால நடைமுறையாக இருந்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜம்முவுக்கும் ஸ்ரீநகருக்கும் இடையில் மாற்றும் இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தி வந்துள்ளது.

    முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு

    இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அளிக்கப்பட்ட அந்தஸ்துடன் மாநிலத்துக்கான அந்தஸ்தையும் இழந்து , ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் அங்கு கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் இன்று முதன்முதலாக ‘தர்பார் மாற்றம்’ நடைபெற்றது.

    முன்னதாக, கடந்த ஆறுமாத காலமாக கோடைக்கால தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வந்த தலைமைச் செயலகம் கடந்த மாதம் 26-ம் தேதி மூடப்பட்டது. அங்கிருந்த முக்கிய கோப்புகள் லாரிகள் மூலம் ஜம்முவுக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் ஒரு வாரம் இந்த பணிகள் நடைபெற்ற பின்னர் ஸ்ரீநகரில் பணியாற்றிவந்த அரசு அதிகாரிகள் ஜம்முவுக்கு திரும்பினர்.

    இந்நிலையில், ஜம்முவில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று முதல்நாளாக பணிகள் தொடங்கின.

    பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் கவர்னராக நியமிக்கப்பட்ட கிரிஷ் சந்திரா முர்மு இன்று காலை அங்கு நடைபெற்ற முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    Next Story
    ×