search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமை ஆர்வலர்களின் போராட்டம்
    X
    பசுமை ஆர்வலர்களின் போராட்டம்

    ஆரே பகுதியில் மரங்களை வெட்டும் நடவடிக்கை - தாமே முன்வந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

    மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்டும் நடவடிக்கையை தடுக்குமாறு மாணவர்கள் குழு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் எதிரொலியாக நாளை விசாரணை தொடங்குகின்றது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அம்மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, மரங்களை வெட்டும் பணி நேற்று நள்ளிரவே துவங்கியது.

    இதற்காக மரம் வெட்டும் இயந்திரங்கள், புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு மரங்கள் வெட்டும் பணியில் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வீழ்த்தப்பட்ட மரத்தை கட்டியணைத்து கதறும் பெண்

    தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டியுள்ளதால் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என சில பசுமை ஆர்வலர்கள் சார்பில் பம்பாய் ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின் மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்திய ஐகோர்ட் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முயன்ற சுமார் 30 பசுமை ஆர்வலர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று அவர்கள் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மும்பை ஆரே பகுதியில் மும்பை மாநகராட்சி, மெட்ரோ ரெயில் நிர்வாகம்,  மற்றும் போலீசாரின் மரங்களை வெட்டும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு மாணவர்கள் குழு இன்று கடிதம் அனுப்பி இருந்தது.

    இந்த கடிதத்தின் அடிப்படையில் இவ்விவகாரம் தொடர்பாக தாமே முன்வந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது. சிறப்பு அமர்வின் முன்னர் நாளை விசாரணை தொடங்குகின்றது.
    Next Story
    ×