search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர சட்டசபை
    X
    ஆந்திர சட்டசபை

    ஆந்திர சட்டசபை நாற்காலிகள் முன்னாள் சபாநாயகர் மகனின் ஷோ ரூமில் இருந்து மீட்பு

    ஆந்திர சட்டசபையின் முன்னாள் சபாநாயகர் கோடலா சிவபிரசாத்தின் மகனுக்கு சொந்தமான பர்னிச்சர் ஷோ ரூமில் இருந்து சட்டப்பேரவையின் நாற்காலிகள் உள்ளிட்ட மரசாமான்கள் மீட்கப்பட்டுள்ளன.
    அமராவதி:

    ஆந்திராவில் கடந்த தெலுங்குதேச ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத். ஆந்திரா பிரிக்கப்பட்டபோது ஐதராபாத்தில் ஆந்திர சட்டசபை கட்டிடத்தில் இருந்த பொருட்களை அமராவதி சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றும் போது ஏராளமான பர்னிச்சர் பொருட்கள் மாயமானதாக புகார் எழுந்தது.

    புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. பிரபாகர் ராவ் விசாரணை நடத்தினார். இதில் சட்டசபையில் இருந்து 4 வாகனங்களில் ஏற்றப்பட்ட பர்னிச்சர் பொருட்கள் அப்போதைய சபாநாயகர் கோடலா சிவபிரசாத் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சட்டசபையில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சட்டசபையில் இருந்து பர்னிச்சர் பொருட்களை கோடலா சிவபிரசாத்தின் வீடு மற்றும் அவரது மகனின் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து, அவற்றை உபயோகப்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.

    கோடலா சிவபிரசாத்

    இதையடுத்து கோடலா சிவபிரசாத் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இது குறித்து கோடலா கூறுகையில், ‘நான் அந்த பொருட்களை திருடவில்லை. தற்காலிக வளாகத்தில் வைத்தால் அவை சேதம் அடையும் என்ற எண்ணத்தில் எனது அலுவலகத்தில் அமைந்துள்ள வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

    ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிகாரிகளை வந்து எடுத்து செல்லுமாறு கூறியும் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் பொருட்களை எடுத்து செல்லலாம். அல்லது அதற்கான பணத்தை தரக்கூட தயாராக இருக்கிறேன்’ என்றார்.

    இந்நிலையில் கோடலா சிவபிரசாத்தின் மகன் பர்னிச்சர் ஷோ ரூமில் இருந்து, சட்டப்பேரவையின் மரசாமான்களை போலீசார் மற்றும் பேரவை அலுவலர்கள் தற்போது மீட்டுள்ளனர்.

    இதில் மொத்தமாக சட்டப்பேரவைக்கு சொந்தமான 70 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சட்டப்பேரவை அதிகாரிகள் கொடுத்த மாயமான பொருட்களின் எண்ணிக்கையை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×