search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திராயன்2 வெற்றிப் பயணம்
    X
    சந்திராயன்2 வெற்றிப் பயணம்

    சந்திரயான்2 மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது

    சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.
    பெங்களூரு:

    சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.

    நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
     
    புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.

    பின்னர், கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.52 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முதலாக உயர்த்தப்பட்டது. அதாவது பூமிக்கு அருகே குறைந்தபட்சமாக 230 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,163 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றி வரும் வகையில் விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது.

    சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை கடந்த 26-ம் தேதி இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது. தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடி நேற்று அதிகாலை 1.08 மணிக்கு சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள மோட்டாரை விஞ்ஞானிகள் 16 நிமிடம் இயக்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து விண்கலத்தின் சுற்றுப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக இன்று சுற்றுப்பாதை மேலும் ஒரு படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.

    திட்டமிட்டபடி  இன்று பிற்பகல் 3.12 மணிக்கு பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் சிமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள மோட்டாரை 989 நிமிடங்களுக்கு இயக்கினார்கள்.

    பெங்களூருவில் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை

    இதன்பிறகு நிலை உயர்த்தப்பட்ட சந்திரயான்-2 தற்போது 71792 கிலோமீட்டர் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வருவதாகவும் இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது.

    நான்காவது முறையாக ஆகஸ்டு 14-ந் தேதி விண்கலத்தின் பாதை மேலும் உயர்த்தப்படும்போது, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி, சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான்-2 சென்றடையும்.

    அதன்பிறகு சந்திரனை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ந் தேதி நிலவில் இறங்கும். விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவர அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கும்.

    விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    Next Story
    ×