search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்
    X
    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

    இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை எடுங்கள் - வெளியுறவு மந்திரிக்கு பினராயி விஜயன் கடிதம்

    கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    பாரசீக வளைகுடாவின் ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்து உள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் 18 பேர் உள்பட 23 மாலுமிகள் சிக்கி உள்ளனர். இந்திய மாலுமிகளில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    எனவே அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஹேர்முஸ் ஜலசந்தியில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இந்திய மாலுமிகள் சிக்கியிருக்கும் தகவலை அறிந்தேன். அதில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இதில் மலப்புரம் மாவட்டம் வண்டூரை சேர்ந்த அஜ்மல் சாதிக் என்பவர் நேற்று (நேற்று முன்தினம்) குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அப்போது கடந்த 4-ந் தேதி முதலே ஈரானிடம் சிக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

    இந்திய மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் உங்கள் அமைச்சகம் ஈடுபட்டு இருப்பதையும் புரிந்து கொண்டுள்ளேன். இந்த மாலுமிகள் அனைவரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அந்த நடவடிக்கை தொடர்பான தகவல்களை மாநில அரசுடன் பகிர்ந்து கொண்டால், அவற்றை நாங்கள் அந்த மாலுமிகளின் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தி உதவிட வசதியாக இருக்கும்.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.
    Next Story
    ×