search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் காந்தி தொடங்கிய பள்ளி நிதி இல்லாமல் மூடப்படுகிறது
    X

    குஜராத்தில் காந்தி தொடங்கிய பள்ளி நிதி இல்லாமல் மூடப்படுகிறது

    தேசத்தந்தை மகாத்மா காந்தி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 1921-ம் ஆண்டு தொடங்கிய ராஷ்ட்டிரிய சாலா பள்ளி தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக விரைவில் மூடப்படுகிறது. #MahatmaGandhi
    ராஜ்கோட்:

    தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த ராஜ்கோட்டில் ராஷ்ட்டிரிய சாலா என்ற பள்ளி உள்ளது. இது கடந்த 1921-ம் ஆண்டு காந்தியால் தொடங்கப்பட்டது.

    சுதந்திர போராட்டத்துக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்காக இந்த பள்ளியை அவர் தொடங்கி அங்கு அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1939-ம் ஆண்டு அங்கு உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்.

    தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தி நமது நாட்டில் ஆங்கிலேயர்களின் கல்வி அடிமைதனத்துடன் வேரூன்றி இருப்பதாக கருதினார். அதை மாற்ற எண்ணிய அவர் மாநில மொழி கல்வியை இப்பள்ளியில் இருந்துதான் புகுத்தினார்.

    இத்தகைய பெருமையும், சிறப்பும் வாய்ந்த பள்ளி விரைவில் மூடப்படுகிறது. கடந்த 1970 முதல் 2000-ம் ஆண்டுவரை இங்கு சுமார் 1000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றனர். தற்போது 37 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

    இந்த பள்ளியை ராஷ்ட்டீரிய சாலா அறக்கட்டளை நடத்தி வருகிறது. பலரிடம் பெறும் நன்கொடைகள் மூலம் இந்த பள்ளி நடத்தப்படுகிறது.

    தற்போது நன்கொடை தர யாரும் முன்வராததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளியை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே பள்ளி விரைவில் மூடப்படும் என நிர்வாகம் அறிவித்தது. ஆகவே அங்கு படித்த மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டனர்.

    சமீபத்தில் ராஷ்டீரிய சாலா அறக்கட்டளை ஒரு சிறிய கையடக்க புத்தகம் வெளியிட்டது. அதில் இப்பள்ளியின் பெருமைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. இந்த பள்ளியை காக்க மக்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நன்கொடை வழங்க வேண்டும்.

    ஏனெனில் இப்பள்ளியை நடத்த ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தேவைப்படுகிறது. அரசிடம் இருந்து மானியம் பெற முயற்சித்தோம். தொடக்க பள்ளி மற்றும் இசைப் பள்ளிக்கு மானியம் இல்லை என்று அரசின் விதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மானேஜிங் டிரஸ்டியும், பொதுச் செயலாளருமான ஜித்து பட் கூறும்போது, “பள்ளியை நடத்த எங்களுக்கு ரூ.30 லட்சம்வரை தேவைப்படுகிறது. ஆனால் போதிய நிதி கிடைக்கவில்லை. எனவே பள்ளியை மூடுவதை தவிர வேறு வழியில்லை.

    இப்பள்ளி 13 ஏக்கர் நிலத்தில் உள்ளது. இதை அன்றைய ராஜ்கோட் மாநில ஆட்சியாளர் லகாஜிராஜ் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியுள்ளார்.


    பெருமைமிகு இப்பள்ளியை காப்பாற்ற நிதி ஒதுக்கீடு செய்யும்படி குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானியிடம் நேரம் கேட்டு இருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடி வருகிற 30-ந்தேதி குஜராத் வர இருக்கிறார்.

    ராஜ்கோட்டில் காந்தி அருங்காட்சியக திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். அதற்காக முதல் மந்திரியை சந்திப்பது தள்ளிப் போடப்பட்டுள்ளது” என்றார்.

    காந்தி பிறந்த ஊரில் பிரதமர் மோடி அவரது நினைவை போற்றும் வகையில் அருங்காட்சியகம் திறக்க இருக்கிறார். அதே நேரத்தில் காந்தி தொடங்கிய பள்ளி அருங்காட்சியகத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது. தற்போது மூடப்படும் நிலையில் இருக்கும் இந்த பள்ளியை காப்பாற்ற குஜராத் அரசும், மோடியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேச பக்தர்கள் கருதுகின்றனர். #MahatmaGandhi #RashtriyaShala #PMModi
    Next Story
    ×