search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீருடையுடன் தெருவில் மீன் விற்ற கல்லூரி மாணவி- பினராயி விஜயன் ஆதரவு
    X

    சீருடையுடன் தெருவில் மீன் விற்ற கல்லூரி மாணவி- பினராயி விஜயன் ஆதரவு

    கல்வி, குடும்பச் செலவுக்காக சீருடையுடன் தெருவில் மீன் விற்ற கல்லூரி மாணவியை சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சித்து வந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் மாணவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனான். தொடுபுழாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹனான் பி.எஸ்சி 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஹனான் குடும்பச் செலவுக்காக சுயமாக வேலை செய்து  கல்வி கட்டணத்தை செலுத்தி வந்தார். இதற்காக கைவினை பொருட்கள், மாலைகள் தயாரித்து தெருக்களில் விற்பனை செய்து பணம் ஈட்டினார்.

    சமீபத்தில் மாணவி ஹனான் தொடுபுழா தெருக்களில் கல்லூரி சீருடையுடன் மீன் விற்பனை செய்தார். ஏராளமானோர் அவரிடம் மீன் வாங்கி சென்றனர். மாணவி ஒருவர் கல்லூரி சீருடையில் தெருவில் நின்ற படி மீன் விற்பனை செய்தது பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது.

    இது சமூக ஊடகங்களில் பரவியதும், மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் மாணவி சுயமாக சம்பாதித்து குடும்பத்தையும், தனக்குரிய கல்வி கட்டணத்தையும் செலுத்துவதை பாராட்டி கருத்து பதிவிட்டனர்.

    ஹனானுக்கு ஊடகங்களில் பாராட்டு குவிந்த நிலையில் ஒரு தரப்பினர் அவரை விமர்சிக்கவும் செய்தனர். பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் ஹனான் தெருவில் மீன் விற்பது போல் நடிக்கிறார் என தகவல் பரப்பினர்.

    இதற்கு கண்டனக்குரல்கள் எழுந்தன. சிலர் ஆதரிக்கவும் செய்தனர். ஆதரவாளர்கள் ஹனானை மேலும் மேலும் இழிவுப்படுத்தி செய்தி பரப்பினர்.

    தன்னைப்பற்றி அவதூறு பரவுவதை அறிந்து மாணவி ஹனான் மனம் வருந்தினார். உண்மையிலேயே தன் குடும்பம் ஏழ்மையானது என்றும், தனது தாயார் நோயால் அவதிப்பட்டு வருகிறார், அவருக்காகவே இது போன்று சிறு சிறு வேலைகள் செய்து பணம் ஈட்டி வருவதாக கூறினார்.

    ஹனான் கூறுவது உண்மை என்று அவரது கல்லூரி ஆசிரியர்களும், நிர்வாகமும் கருத்து தெரிவித்தது. சில சமூக ஆர்வலர்கள் ஹனானின் குடும்பப் பின்னணியை விசாரித்து ஹனான் கூறுவது உண்மை தான் என்றும், அவரை விமர்சிக்க வேண்டாம் என்றும் கூறினர்.


    மாணவி ஹனான் குறித்த தகவல் முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்திற்கும் சென்றது. அவர், இது பற்றி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டரிடம் விசாரித்தார். பின்னர் ஹனான் குறித்து தனது பேஸ்புக் தளத்தில் கருத்து பதிவிட்டார். அதில், மாணவி ஹனானின் தன்னம்பிக்கையை பாராட்டுவதாகவும், அவருக்கு கேரளாவும், கேரள மக்களும் துணை நிற்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    அதோடு ஹனானை தேவையின்றி விமர்சித்து அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், கூறி இருந்தார்.

    இதுபோல கேரளாவைச் சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னந்தானமும் மாணவி ஹனானுக்கு பாராட்டு தெரிவித்தார். அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி இருந்தார்.

    மேலும் கேரள திரையுலக பிரபலங்களும், ஹனானுக்கு உதவ முன் வந்தனர். சிலர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினர். இதில், டைரக்டர் அருண்கோபியின் படத்தில் நடிக்க மாணவி ஹனானுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் பிரபல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னந்தானம் மற்றும் சினிமா பிரபலங்களின் பாராட்டை தொடர்ந்து தொடுபுழா பகுதியில் ஹனான் பிரபலமாகி விட்டார். அவர், தெருவுக்கு வந்தால் மக்கள் திரண்டு சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களிடமிருந்து ஹனானை போலீசார் மீட்டு வரும் அளவிற்கு அவரது நிலைமை மாறி விட்டது. #Hanan
    Next Story
    ×