search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறியியல் கலந்தாய்வு : கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    பொறியியல் கலந்தாய்வு : கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுடெல்லி :

    பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வை இந்த மாத இறுதிக்குள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

    ஆனால், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டது.

    இதனால் பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்டு 31-ந் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளதால் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

    மேலும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் சேர்வார்கள். எனவே, கலந்தாய்வை நடத்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, இதுவரை நடந்த கலந்தாய்வில் எத்தனை மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×