search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்காக 70 பழங்குடி கிராமங்கள் அழிப்பு
    X

    ஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்காக 70 பழங்குடி கிராமங்கள் அழிப்பு

    ஆமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரெயில் திட்டம் 70 பழங்குடியின கிராமங்கள் வழியாக அமைக்கப்படுவதால், அதற்கான தேவைப்படும் நிலத்தை அழிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. #bullettrain
    ஆமதாபாத்:

    இந்தியாவின் முதலாவது அதிவேக புல்லட் ரெயில் மும்பை-ஆமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. ரூ.1 லட்சம் கோடி செலவில் நடைபெறும் இந்த திட்டத்தை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தனர்.

    மும்பை- ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு புதிதாக ரெயில் பாதைகள் அமைக்கப்படுகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் திட்டப் பணிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நிலங்களை கையகப்படுத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த புல்லட் ரெயில் திட்டத்துக்கு மராட்டிய மாநிலத்தில் 110 கி.மீ. நிலம் தேவைப்படுகிறது. அங்கு 70 பழங்குடி கிராமங்கள் வழியாக ரெயில் பாதை செல்கிறது. இதனால் அந்த கிராமங்களை அழித்து நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கு மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தின் பழங்குடியின மக்கள் மற்றும் அங்குள்ள சில சமூகங்கள் தங்களது நிலங்களை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மராட்டியத்தில் இருந்து நிலங்களை எடுப்பதில் தாமதம் ஆகியுள்ளது.

    என்றாலும் இலக்கு நிர்ணயித்தபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நிலங்களை கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து விடும் என்றும், இதற்காக நிலங்களின் மதிப்பை விட கூடுதலாக 5 மடங்கு பணம் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

    புல்லட் ரெயிலுக்காக மராட்டியத்தில் மட்டும் 1,400 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் நிலம் கையகப்படுத்த ரூ.10,000 கோடி செலவாகியுள்ளது.

    மராட்டியத்தில் நிலம் அளிக்க மறுப்பு தெரிவிப்பது பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்த பழங்குடியின கிராம மக்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வாழ்கிறார்கள், அவர்கள் நிலம் அளிக்க மறுப்பு தெரிவிப்பதற்கு அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் என்று தெரிவித்தனர்.

    மொத்தம் 73 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் 50 கிராமங்கள் நிலம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மீதம் உள்ள 23 கிராமங்கள் தான் சிக்கலாக உள்ளன என்றும் கூறினார்கள்.

    மேலும் நிலம் எடுப்பது குறித்து சர்வே எடுக்கச் சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தாக்கி விரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #bullettrain
    Next Story
    ×