search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் தேர்வு
    X

    நாட்டிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் தேர்வு

    நாட்டிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விருது வழங்கினார்.
    டேக்கன்பூர்:

    குஜராத் மாநிலம், குட்ச் பகுதியில் உள்ள ரான் என்ற இடத்தில் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு நடந்தபோது, நாட்டின் சிறந்த 10 போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கலாம் என்ற யோசனை பிரதமர் நரேந்திர மோடியின் மூளையில் உதித்தது. இதை அவர் அந்த மாநாட்டில் பேசுகையில் வெளியிட்டார்.

    அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் நடந்த போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

    அதன்படி இந்த ஆண்டு குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், போலீஸ் சமுதாய பணிகள், கணினி மூலம் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், போலீஸ் நிலையத்தில் பொதுமக்களை வரவேற்கும் முறை மற்றும் சுத்தமாக வைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 10 போலீஸ் நிலையங்கள், சிறந்த போலீஸ் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டன.

    மேலும், போலீஸ் நிலைய கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள், நவீன இருக்கை முறைகள், மாசு இல்லாத அறைகள் ஆகியவையும் போலீஸ் வீட்டுவசதி துறை மூலம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் அமைத்து கொடுக்கப்பட்டன. டி.ஜி.பி. திரிபாதி மேற்பார்வையில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையங்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    அந்த வகையில் நாட்டிலேயே சிறந்த போலீஸ் நிலையமாக கோவை ஆர்.எஸ். புரம் போலீஸ் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2-வது இடம் ஐதராபாத் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளது. 3-வது இடம் லக்னோ குடம்பா போலீஸ் நிலையத்துக்கும், 4-வது இடம் மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி போலீஸ் நிலையத்துக்கும் கிடைத்தது.

    5-வது இடத்தை சென்னை கே-4 போலீஸ் நிலையம் (அண்ணாநகர் போலீஸ் நிலையம்) பிடித்தது.

    6-வது இடம் உத்தரகாண்ட் மாநிலத்தின் பாம்பூல்பாரா, 7-வது இடம் உத்தரபிரதேசத்தின் கிரார், 8-வது இடம் உத்தரகாண்டின் ரிஷிகேஷ், 9-வது இடம் கேரளாவின் வலபட்டணம், 10-வது இடம் டெல்லி கீர்த்தி நகர் போலீஸ் நிலையத்துக்கும் கிடைத்தது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், டேக்கன்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில், நாட்டிலேயே சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கான விருதை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோரிடம் வழங்கினார்.

    விருது கிடைத்ததற்காக கோவை நகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, துணை கமிஷனர் லட்சுமி ஆகியோர் கோவை நகர ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் நகர போலீசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதே போன்று சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கும் 5-வது சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு பெற்றதற்கு விருது வழங்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×