search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் சுமுகமாக செயல்பட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி
    X

    பாராளுமன்றம் சுமுகமாக செயல்பட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி

    பாராளுமன்றம் சுமுகமாக செயல்பட அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
    புதுடெல்லி:

     பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நாளை தொடங்குகிறது. இதில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் திட்டங்களை அடுத்த நிதியாண்டியின் முதல் நாளில் இருந்தே தொடங்குவதற்கு வசதியாக, முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியை ஏற்படுத்தியதால், அந்த தொடர் முற்றிலும் முடங்கியது.

    பட்ஜெட் தொடரிலும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

    எனவே பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க ஏதுவாக அனைத்துக்கட்சி கூட்டம் மத்திய அரசால் நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசை தவிர பிற முக்கியமான கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் நமக்குள்ளே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பாராளுமன்றம் என்பது மகா பஞ்சாயத்து. அது கண்டிப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

    இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார், பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு அனைத்துக்கட்சிகளும் நேர்மறையாக பதிலளித்ததுடன், பாராளுமன்றம் சுமுகமாக இயங்க அவர்களும் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் மத்திய அரசு பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்திருக்கக்கூடாது என்று கூறி வரும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த ஆனந்த் குமார், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

    நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், அனைத்து பிரிவினரும் பட்ஜெட்டால் பயன்பெற வேண்டும் என்பதுமே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×