என் மலர்

  செய்திகள்

  வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது
  X

  வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் மத்திய குழுவினர் ஆய்வு செய்கிறார்கள்.
  புதுடெல்லி:

  வங்க கடலில் உருவான ‘வார்தா’ புயல் கடந்த 12-ந் தேதி சென்னையை தாக்கியது. அன்று காலை புயல் கரையை கடந்த போது சென்னை நகரிலும், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. கூரைகள் காற்றில் பறந்தன. வாழைமரங்கள் உள்ளிட்ட பயிர்களும் நாசமாயின.

  ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. போக்குவரத்தும் முடங்கியது. புயல்-மழையின் காரணமாக 24 பேர் உயிர் இழந்தனர்.

  புயல் நிவாரண பணிக்காக உடனடியாக ரூ.500 கோடி வழங்கி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அத்துடன், உடனடி நிவாரணமாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1,000 கோடி வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், புயல் சேதங்களை பார்வையிட குழு ஒன்றை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

  பின்னர் கடந்த 19-ந் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.22 ஆயிரத்து 573 கோடி வழங்குமாறு கோரி மனு ஒன்றையும் அளித்தார்.

  இதைத்தொடர்ந்து, புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்ச இணைச் செயலாளர் பிரவீண் வஷிஸ்டா தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

  இந்த குழுவில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலத்துறையைச் சேர்ந்த டாக்டர் கே.மனோ சரண் (புகையிலை துறை பொறுப்பு இயக்குனர்), மத்திய நிதித்துறை (செலவினம்) உதவி இயக்குனர் ஆர்.பி.கவுல், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை சார்பு செயலாளர் கே.நாராயண் ரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மூத்த மண்டல இயக்குனர் டாக்டர் ஆர்.ரோஷினி அர்தர், மத்திய மின்சார ஆணைய துணை இயக்குனர் சுமீத் குமார், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மண்டல அதிகாரி டி.எஸ்.அரவிந்த், மத்திய ஊரக வளர்ச்சித் துறை (திறன்) சார்பு செயலாளர் எஸ்.பி.திவாரி, மத்திய நீர் ஆணையத்தின் காவிரி மற்றும் தென்னக நதிகள் இயக்குனர் (கண்காணிப்பு) ஆர்.அழகேசன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

  மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளில், டாக்டர் ஆர்.ரோஷினி அர்தர், டி.எஸ்.அரவிந்த் ஆகியோர் சென்னையிலும், ஆர்.அழகேசன் கோவையிலும் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ‘வார்தா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சென்னை வருகின்றனர்.

  இந்த குழுவினர் நாளை (புதன்கிழமை) காலை தலைமைச்செயலகத்துக்கு சென்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து கேட்டு அறிகின்றனர்.

  பின்னர் மத்திய குழுவினர், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிடத்திற்கு செல்கின்றனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அவர்கள் பார்வையிடுகிறார்கள்.

  அதன்பிறகு, சென்னை நகரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடும் மத்திய குழுவினர், அப்புறப்படுத்தப்பட்ட மரங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் சென்று பார்க்கின்றனர்.

  பிற்பகலில் காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு மத்திய குழுவினர் செல்கின்றனர். முதலாவதாக, வண்டலூர் மிருககாட்சி சாலைக்கு செல்லும் அவர்கள், அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிடுகின்றனர். தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிடும் அவர்கள் இரவில் சென்னை திரும்புகின்றனர்.

  29-ந் தேதி (வியாழக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளும் மத்திய குழுவினர் பழவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். அன்று இரவு சென்னை திரும்பும் மத்திய குழுவினர் ஓட்டலில் தங்குகின்றனர்.

  மறுநாள் (30-ந் தேதி) காலையில், மத்திய குழுவினர் தலைமைச்செயலகம் சென்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளை சந்திப்பார்கள் என தெரிகிறது. அன்று மதியமே அவர்கள் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். பின்னர், சேத மதிப்பு பற்றிய அறிக்கையை தயாரித்து, ஓரிரு நாளில் மத்திய அரசிடம் வழங்குவார்கள்.

  அதன் அடிப்படையில், தமிழகத்துக்கு எவ்வளவு நிதி வழங்குவது? என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்து அறிவிக்கும்.
  Next Story
  ×