search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் இன்றும் முடங்கியது பாராளுமன்றம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினையால் இன்றும் முடங்கியது பாராளுமன்றம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு

    ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் இன்றும் பாராளுமன்றம் முடங்கியது.
    புதுடெல்லி:

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி வருவதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. எந்த விதியின்கீழ் விவாதம் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடியது. பாராளுமன்ற விதி எண் 193-ன் கீழ் ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து இன்று விவாதம் நடத்த பட்டியலிடப்பட்டிருந்தது. அதன்படி, உடனடியாக விவாதம் நடத்த தயார் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    ஆனால், அவரது அழைப்பை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தினால் மட்டுமே விவாதத்திற்கு வருவதாக திட்டவட்டமாக கூறியது. அத்துடன் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். ‘விவாதத்திற்கு பயந்து அரசு ஏன் ஓடுகிறது? வாக்கெடுப்பு நடத்த பயப்பட வேண்டாம், எங்களுக்கு தேவை வாக்கெடுப்புதான்’ என தொடர்ந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

    காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக இணைந்துகொண்டதால் அவையில் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது. எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து மதியம் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பிறகு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
    Next Story
    ×