search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மாநிலம் மலப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடித்தது ‘பிர‌ஷர் குக்கர்’ குண்டு
    X

    கேரள மாநிலம் மலப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடித்தது ‘பிர‌ஷர் குக்கர்’ குண்டு

    கேரள மாநிலம் மலப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குண்டு வெடித்தது குறித்து மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மலையோர கிராமப் பகுதிகளில் மறைந்திருந்து இவர்கள் திடீர் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

    அரசு அலுவலகங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை குறிவைத்து இவர்களது தாக்குதல்கள் நடக்கிறது. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்க ‘தண்டர்போல்ட்’ என்ற விசே‌ஷ அதிரடி போலீஸ் படை உருவாக்கப்பட்டு அவர்கள் மாவோயிஸ்டு தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று குண்டு வெடித்துள்ளது. இந்த வளாகத்தில் கோர்ட்டு, மாவட்ட மருத்துவர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாவட்ட மருத்துவ அலுவலரின் காரின் கீழ் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதில் அந்த கார் சேதமடைந்தது. அருகில் நின்ற சில வாகனங்களின் கண்ணாடிகளும் நொறுங்கியது. குண்டு வெடிப்பு காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் அரசு ஊழியர்களும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த கார் அருகே பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. குண்டு வெடித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மற்றும் போலீஸ் அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்தனர். வெடி குண்டு நிபுணர்களின் முதல் கட்ட விசாரணையில் இந்த குண்டு பிர‌ஷர் குக்கர் குண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்க தீவிரவாத தலைவன் பின்லேடனின் படம் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட துண்டு பிரசுர மும் கிடந்தது.

    மேலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில துண்டு பிரசுரங்களில் 2015-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக முகம்மது என்பவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற செயல் தொடர்ந்தால் இதைவிட பெரிய குண்டு வெடிப்புகள் நடக்கும் என்ற எச்சரிக்கை வாசகமும் ‘பேஸ் மூவ்மென்ட்’ என்ற பெயரும் அதில் இருந்தது.

    இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது பற்றி போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். மேலும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளும் இந்த குண்டு வெடிப்பு பற்றி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று சம்பவ இடத்திற்கு சென்று தங்கள் விசாரணையை தொடங்குகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் கொல்லம் கோர்ட்டு வளாகத்தில் குண்டு வெடித்து ஒரு பெண் காயம் அடைந்தார். இந்த நிலையில் மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குண்டு வெடித்து உள்ளதால் 2 சம்பவத்திலும் ஒரே அமைப்பினர் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    Next Story
    ×