search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் ஊடுருவ 100 தீவிரவாதிகள் முயற்சி: உளவுத்துறை தகவல்
    X

    எல்லையில் ஊடுருவ 100 தீவிரவாதிகள் முயற்சி: உளவுத்துறை தகவல்

    100 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவுவதற்கு தயாராக உள்ளனர். அவர்கள் எல்லையை தாண்டுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளன.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுகிறது. இரு நாட்டு ராணுவமும் இங்கு எல்லையில் குவிக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே காஷ்மீருக்குள் அதிக அளவு தீவிரவாதிகளை ஊடுருவ செய்து நாச வேலைகளை செய்ய பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இதற்காக 100 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவுவதற்கு தயாராக உள்ளனர். அவர்கள் எல்லையை தாண்டுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளன.

    எனவே, எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படை ஜெனரல் கே.கே. சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நமது படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச எல்லையில் இதுவரை சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடும் நடைபெறவில்லை.

    ஆனாலும், சூழ்நிலை மோசமாகவே இருக்கிறது. அந்த பகுதியில் அடிக்கடி பாகிஸ்தானில் ஆள் இல்லா விமானங்கள் சுற்றி வருகின்றன. இருந்தாலும் அதற்கு பயப்பட தேவையில்லை. அவர்கள் தங்கள் படையை அங்கு நிறுத்துவதால் அதை கண்காணிப்பதற்கு கூட ஆள் இல்லா விமானங்களை அனுப்பி பார்வையிடலாம். அவர்கள் எந்த தாக்குதல் நடத்தினாலும் அதற்கு பதில் தாக்குதல் நடத்துவதற்கு நாமும் தயார் நிலையில் இருக்கிறோம்.

    அந்த பகுதியில் உள்ள இந்திய மக்கள் யாரையும் வெளியேறும்படி கூறவில்லை. எல்லை பகுதியில் விவசாயம் செய்திருக்கும் மக்கள் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×