search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜதானி, சதாப்தி, துரந்தோ அதிவேக ரெயில்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
    X

    ராஜதானி, சதாப்தி, துரந்தோ அதிவேக ரெயில்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

    ராஜதானி, சதாப்தி மற்றும் துரந்தோ அதிவேக ரெயில்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
    புதுடெல்லி:

    ராஜதானி, சதாப்தி மற்றும் துரந்தோ அதிவேக ரெயில்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

    ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய அதிவேக ரெயில்களில் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த ரெயில்வே அமைச்சகம் கடந்த 7-ந் தேதி முடிவு செய்தது.

    இதன்படி, இந்த ரெயில்களில், முதல் 10 சதவீத படுக்கைகளுக்கு சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்து, ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகளுக்கும் 10 சதவீதம் கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும். இவ்விதம், அதிகபட்சமாக 50 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும்.

    ஆனால், இந்த ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி., எக்சி கியூட்டிவ் ஆகிய வகுப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 9-ந் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, நேற்று கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஏற்கனவே முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இருப்பினும், புதிதாக நேற்று முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.

    கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால், இந்த கட்டண உயர்வு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக ரெயில்வே நேற்று விளக்கம் அளித்தது. இதுகுறித்து ரெயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் கூறியதாவது:-

    மொத்தம் 12 ஆயிரத்து 500 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 142 ரெயில்களில் மட்டுமே கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் ரெயில்களில் 2 கோடியே 30 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களில், 15 ஆயிரம் பேரை மட்டுமே இது பாதிக்கும். இம்முடிவை எடுக்கும்போதே, சாதாரண மக்களை பாதிக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டோம்.

    ரெயில்களை இயக்குவதற்கு ஒரு பயணிக்கு ஒரு கி.மீ.க்கு 73 காசு வீதம் செலவாகிறது. ஆனால், இதில் 37 காசை மட்டுமே ரெயில்வே திரும்ப எடுக்கிறது. அதாவது, 56 சதவீத செலவை மட்டுமே திரும்பப் பெறுகிறது. இதனால் ஆண்டுதோறும் ரூ.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×