search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசுக்கு வருமானம் ரூ.18 ஆயிரம்-அதிகாரிகள் வாங்கிய லஞ்சம் ரூ.3 லட்சம்: சோதனைச் சாவடியில் சிக்கிய அதிகாரிகள்
    X

    அரசுக்கு வருமானம் ரூ.18 ஆயிரம்-அதிகாரிகள் வாங்கிய லஞ்சம் ரூ.3 லட்சம்: சோதனைச் சாவடியில் சிக்கிய அதிகாரிகள்

    வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், லஞ்சப் பணத்துடன் அதிகாரிகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மிகப்பெரிய வாகன சோதனை சாவடி வாளையார் சோதனை சாவடியாகும். 2-வது பெரிய சோதனை சாவடி வேலந்தாவளம் சோதனை சாவடியாகும்.

    இந்த வழியாகத்தான் தமிழகத்தின் பிறபகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கேரளாவுக்கு செல்லும். தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி கோவையில் இருந்து டி.வி., வாஷிங் மிஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களான அரிசி, பருப்பு எண்ணை உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படுகிறது.

    பல மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் வேலந்தாவளம் சோதனை சாவடியில் 2 கி.மீட்டர் தூரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மின் சாதனப்பொருட்களுக்கு 7 சதவீதம் முதல் 10 சதவீதம் மட்டுமே விற்பனை வரிவிதிக்க வேண்டும். அதேபோன்று உணவுப்பொருட்களுக்கும் வரிவசூலிக்க வேண்டும்.

    காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சோதனை சாவடியில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. உணவுப் பொருட்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை.

    இதனை பயன்படுத்திய சோதனை சாவடி அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த மற்றும் லஞ்சம் கொடுக்கும் லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையார்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த லாரிகளை அனுப்பி விடுகிறார்கள் என்று பாலக்காடு மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி சுகுமாறனுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து நேற்று அதிரடியாக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி சுகுமாறன் மற்றும் அதிகாரிகள் வேலந்தாவளம் சோதனை சாவடிக்குள் நுழைந்தனர்.

    அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நசீர், பிரபாகரன், மொய்தீன் ஆகியோர் இருந்தனர். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடியாக புகுந்ததை அறிந்த சோதனைச் சாவடி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பணத்தை கட்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசினர்.

    வெளியே கிடந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சேகரித்தனர். பின்னர் சோதனை சாவடி அலமாரியில் சோதனை செய்தபோது ஆவணங்களுக்கு இடையே கட்டுக்கட்டாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் இருந்தன. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எண்ணிப்பார்த்தனர். அதில் ரூ.3 லட்சத்து 800 இருந்தது.

    பின்னர் விற்பனை வரி ஆவணங்களை பார்த்தபோது புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்களில் வெறும் ரூ.18 ஆயிரமே விற்பனை வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. மற்றவை யாவும் லஞ்சப்பணம் என்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பணத்தை பறிமுதல் செய்த பாலக்காடு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி சுகுமாறன் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்தார்.

    கடந்த 2 நாட்களில் அரசுக்கு வந்த விற்பனை வரி வெறும் ரூ.18 ஆயிரம், அதிகாரிகள் வசூலித்த லஞ்சப் பணம் ரூ.3 லட்சத்து 800 என்ற தகவல் தமிழக- கேரள எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×