search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா அலுவலகத்தில் குண்டு வீச்சு: பினராய் விஜயன் மீது பா.ஜ.க. தலைவர் கடும் தாக்கு
    X

    பா.ஜனதா அலுவலகத்தில் குண்டு வீச்சு: பினராய் விஜயன் மீது பா.ஜ.க. தலைவர் கடும் தாக்கு

    பா.ஜனதா அலுவலகம் மீது குண்டுவீசப்பட்டதை கண்டித்து இன்று மாநிலத்தில் கருப்பு தினம் கடைபிடிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதால் பல இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும், பா.ஜனதா நிர்வாகிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இதன் காரணமாக 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கொல்லப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜனதா மாநில அலுவலகத்தில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அந்த அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பா.ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்த கேமராவில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வரும் ஒருவர் பா.ஜனதா அலுவலகம் மீது குண்டு வீசி விட்டு செல்வது பதிவாகி உள்ளது. அதன் மூலம் துப்பு துலக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பா.ஜனதா அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டதற்கு அந்த கட்சியின் மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேரளாவில் முதல் முறையாக ஒரு கட்சியின் மாநில அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டு உள்ளது. பா.ஜனதாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கம்யூனிஸ்டு கட்சியினர்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    கம்யூனிஸ்டு முதல்-மந்திரி பினராய் விஜயன் தீவிரவாதத்தை வளர்த்து தீவிரவாதி போல செயல்பட்டு வருகிறார். ஆளுங்கட்சியே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது கேரளாவில் மட்டும்தான் நடக்கிறது.

    மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததற்கு பினராய் விஜயன்தான் காரணம். அவர்கள் அடங்காவிட்டால் அவர்களை அடக்குவோம். பா.ஜனதா அலுவலகம் மீது குண்டுவீசப்பட்ட நாள் கருப்பு தினமாகும். இதைக் கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கோழிக்கோட்டில் நடந்த கண்டன ஊர்வலத்திலும் கும்மனம் ராஜசேகரன் கலந்து கொண்டார். பா.ஜனதா கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான ஓ. ராஜகோபாலும் குண்டுவீச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பா.ஜனதா அலுவலகம் மீது குண்டுவீசப்பட்டதை கண்டித்து இன்று மாநிலத்தில் கருப்பு தினம் கடைபிடிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதால் பல இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
    Next Story
    ×