என் மலர்

  செய்திகள்

  ராஜதானி, சதாப்தி, துரந்தோ ரெயில்களில் நாளை முதல் புதிய கட்டணம் அமல்
  X

  ராஜதானி, சதாப்தி, துரந்தோ ரெயில்களில் நாளை முதல் புதிய கட்டணம் அமல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரெயில்களில் கிராக்கிக்கு ஏற்ப ரெயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் 50 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கும்.
  புதுடெல்லி:

  ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரெயில்களில் கிராக்கிக்கு ஏற்ப ரெயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் 50 சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்கும்.

  நாட்டின் முக்கிய அதிவேக ரெயில்களான ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரெயில்களில், மாறுபடும் கட்டண முறையை அறிமுகப்படுத்த ரெயில்வே அமைச்சகம் நேற்று முடிவு செய்தது. இந்த புதிய கட்டண முறை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அனைத்து ரெயில்வே கோட்ட தலைமையகங்களுக்கும் ரெயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

  அந்த உத்தரவின்படி, ராஜதானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரெயில்களில், கிராக்கிக்கு ஏற்ப ரெயில் கட்டணம் உயர்த்தப்படும். ஒவ்வொரு ரெயிலிலும், முதல் 10 சதவீத படுக்கைகள், வழக்கமான கட்டணத்தில் ஒதுக்கப்படும். அடுத்து, ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகளுக்கும் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். இப்படியே, உயர்த்திக்கொண்டே போய், கிராக்கிக்கு ஏற்ப, அதிகபட்சமாக 50 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.

  இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், சேர் கார் எனப்படும் இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவற்றுக்கு கட்டண உயர்வு அதிகபட்சம் 50 சதவீதமாகவும், மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டண உயர்வு அதிகபட்சம் 40 சதவீதமாகவும் இருக்கும்.

  ஆனால், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், எக்சிகியூட்டிவ் வகுப்பு ஆகியவற்றுக்கு தற்போதைய கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

  இதுதவிர, முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம், உணவு கட்டணம், சேவை வரி போன்ற இதர கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

  தட்கலுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளின் கட்டணம், அடிப்படை கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும். முன்பதிவு கட்டணம், சூப்பர்பாஸ்ட் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் வழக்கம்போல் முழுமையாக வசூலிக்கப்படும். தட்கல் ஒதுக்கீட்டு படுக்கைகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது.

  பயணிகளின் இறுதி பட்டியல் வெளியான பிறகு, காலியாக இருக்கும் படுக்கைகள், நடப்பு முன்பதிவுக்கு (கரண்ட் புக்கிங்) ஒதுக்கப்படும். ஆனால், ஒவ்வொரு வகுப்புக்கும் கடைசியாக என்ன விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதோ, அதே கட்டணம், நடப்பு முன்பதிவு பயணிகளிடம் வசூலிக்கப்படும். அத்துடன், இதர கட்டணங்களும் வசூலிக்கப்படும்.

  ஒருவேளை, கீழ்வகுப்பு பயண கட்டணம், உயர் வகுப்பு பயண கட்டணத்தை விட அதிகமாக உயர்ந்து விட்டால், அதை நடப்பு முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் தெரிவித்து, அவர்கள் உயர் வகுப்பில் பயணம் செய்வதற்கான வாய்ப்பை பரிசீலிக்க செய்ய வேண்டும் என்று ரெயில்வே கோட்ட தலைமையகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

  ஒவ்வொரு வகுப்புக்கும் கடைசியாக பெறப்பட்ட கட்டண விவரத்தை ரெயில்களில் ஒட்ட வேண்டும் என்றும், இதன்மூலம், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் அதே கட்டணத்தை வசூலிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

  தற்போது நடைமுறையில் உள்ள சலுகை கட்டணங்கள் நீடிக்கும். கட்டணத்தை திரும்பப் பெறும் (ரீபண்ட்) விதிமுறைகளிலும் மாற்றம் இல்லை.

  இருப்பினும், வருகிற 9-ந் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பயணம் செய்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×