search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினையால் போராட்டம்: தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூரு தமிழ்ச்சங்கம் வேண்டுகோள்
    X

    காவிரி பிரச்சினையால் போராட்டம்: தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூரு தமிழ்ச்சங்கம் வேண்டுகோள்

    காவிரி பிரச்சினையால் போராட்டம் நடந்து வருவதால் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கர்நாடக மந்திரியிடம் மனு அளித்தனர்.
    பெங்களூரு:

    தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 9-ந்தேதி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் போலீஸ் மந்திரி பரமேஸ்வரை பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மழை பொய்த்து போகும்போது கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரி பிரச்சினை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையில் அரசியலை நுழைக்காமல் மத்திய அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டு இரு மாநிலத்திலும் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ வகை செய்ய வேண்டும். கர்நாடக அரசு இங்குள்ள தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் ஆதாயம் தேட விரும்பும் தீய சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழர்களுக்கு தொல்லை தர முயற்சிப்பதை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்ற மந்திரி பரமேஸ்வர், தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டு இருப்பதாகவும், கர்நாடகத்தில் கன்னடர்கள், தமிழர்கள் அனைவரும் சமம் என்றும் கூறினார்.

    Next Story
    ×