search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு மாதமாக நீடிக்கும் வன்முறை: காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
    X

    ஒரு மாதமாக நீடிக்கும் வன்முறை: காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

    காஷ்மீரில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

    காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதால் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதும் அவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிசூடு நடத்துவதும் அடிக்கடி நடைபெறுகிறது. 

    வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 58 பேர் பலியாகி உள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  

    தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருந்த போதிலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பாதுகாப்புபடையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. 

    நேற்று முன்தினம் அனந்தநாக் மற்றும் நட்டிப்போரா ஆகிய இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

    சுமார் ஒரு மாத காலமாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. வாகனங்கள் ஏதும் இன்றி சாலைகள் வெறிச்சோடி கணப்படுகின்றன. அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கி பணிகள் முடங்கி உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

    குறிப்பிட்ட சில பகுதிகளில் எந்த பிரச்சினையும் இல்லாத போதிலும், பாதுகாப்புபடையினர் தங்களை வீடுகளை வீட்டு வெளியே வருவதற்கு அனுமதிப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் பல பகுதிகளில் பால் வியாபாரி, காய்கறி வியாபாரி உள்ளிட்டவர்களை ராணுவத்தினர் அனுமதிப்பதில்லை. இதனால் அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

    சட்டம்-ஒழுங்கை காக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் நூற்றுக்கணக்கான பாதுகாப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் குண்டு துளைக்காத ஆடைகளுடன் துப்பாக்கியை ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×