search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரு போலீசார் பலி
    X

    காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரு போலீசார் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இரு போலீசார் பலியாகினர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் முதல்-மந்திரியுமான முப்தி முஹம்மது சயீத் மரணம் அடைந்ததையடுத்து, அத்தொகுதிக்கு வரும் 22-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி உள்பட மொத்தம் ஒன்பது வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அந்த தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வழக்கம்போல் அனந்த்நாக் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, உள்ளூர் பஸ்நிலையம் அருகே போலீசார் வந்த ரோந்து வாகனத்தின்மீது சுமார் 11.20 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பஷீர் அஹமத் மற்றும் தலைமை காவலர் ரியாஸ் அஹமது ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக, ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்ட அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் தீவிரவாதிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக, நேற்றுமாலை கோரிவான் பகுதி வழியாக எல்லைப் பாதுகாப்பு படையினர் வந்த வாகனங்களின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் பலியாகினர். ஒன்பது பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×