என் மலர்
தேர்தல் செய்திகள்
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து மானாமதுரை, இடைக்காட்டூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பா. ஜனதா ஆட்சியில் நாட்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். 50 ஆயிரம் குறுந்தொழில்கள் முடங்கி விட்டன. கடந்த 5 ஆண்டுகளில் கல்வி கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பா.ஜனதா கூறியது. ஆனால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட எந்த விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகவில்லை. கடன் தான் இரட்டிப்பாகி உள்ளது.
நாட்டில் 8 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜனதாவிற்கு செல்வாக்கு கிடையாது. பா.ஜனதாவை எதிர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கஜா புயல் உள்ளிட்ட எதையும் பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. பா.ஜனதா ஆட்சியில் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களுக்கு பல பெரிய திட்டங்களை நிறைவேற்றிய அனுபவங்கள் உண்டு. அதனால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வீதம் நாங்கள் கொடுப்போம். இது எங்களால் முடியும்.
தற்போது மத்திய அரசில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படி பணியிடங்களை காலியாக வைத்திருப்பது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் சரியாக ஒன்பது மாதங்களில் அனைத்து காலியிடங்களை நிரப்புவோம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். சிவகங்கை தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #PChidambaram #congress #PMModi
மதுரையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும். இந்த திட்டத்தினை கண்டு பா.ஜனதா அச்சம் அடைந்துள்ளது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா தற்கொலை செய்து கொண்டார். எனவே தான் மாநிலங்கள் விரும்பினால் நீட் தேர்வை வைத்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளது.

பிரதமர் தன்னை காவலாளி என்று கூறி வருகிறார். அவர் குற்றவாளிகளை பாதுகாக்கும் காவலாளியாக உள்ளார். எங்களுடைய கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #Congress #KSAlagiri
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் அறிவித்துவிட்ட அந்த வினாடியில் தொடங்கி வெற்றிச் சான்றிதழை பெற்று கழகத்தின் தலைமையகத்தில் கொண்டுவந்து காணிக்கையாக்குவது வரை அயராது சுழன்று உழைக்கும் அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்களால் நிறைந்து வழியும் ஒரே நிகரற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

ஏழை, எளிய நடுத்தர மக்களை இமையாகக் காக்கும் பொறுப்புணர்வு என நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்த வண்ணம் நாட்டின் பிற மாநிலங்களும் நம்மையே பின்பற்றும் அளவுக்கு, கழக அரசு கொண்டு வரும் சாதனைகளை தமிழக மக்கள் உளமாற போற்றுகிறார்கள்.
அதே வேளையில் சூழ்ச்சியையே பிழைப்பாகக் கொண்டு தகிடுதத்தங்களையே பொழுதெல்லாம் செய்து, நரித்தனங்களையே அட்டவணையாக்கி, பொய்யும், புரட்டுமே பொழுதாகக்கொண்டு மக்களை திசை திருப்ப வெறிகொண்டு அலையும் எதிர்க்கட்சிகளை நாம் விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.
தேர்தல் ஜனநாயகத்தில் கழகத் தொண்டர்களை மிஞ்சுவதற்கு இந்த காந்தி தேசத்தில் இணையில்லை என்பதனை மெய்பிக்கும் விதமாக, நாற்பத்தாறு வயது கட்சி, முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் முடிசூடி வழிநடத்துகிறது என்றால் கழகத் தொண்டர்களின் தேர்தல் பணிகள் எத்தகையது என்பதை உணர்த்தும் விதமாக, கூட்டணி இயக்கங்களின் தொண்டர்களோடு ஒற்றுமை அரண் அமைத்து ஒட்டுமொத்த வெற்றியை கொய்வதற்கு ஒன்றரைக் கோடி சிப்பாய் படையும் சத்திய பிரமாணம் மேற்கொள்ள வேண்டும்.
கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்கும் வரை அங்கேயே மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து கடமை ஆற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். நமதருமை கழகக் கண்மணிகள் அனைவரும் இப்பணியில் விழிப்போடு செயல்பட்டால், நாளைய திருநாடும் நமதாகும். நாற்பது தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் வெற்றிகள் அனைத்துமே நமக்கென ஆகும் என்பது சத்தியம்.
பானை பொங்குகிற நேரம். நம் பாசத்திற்குரிய தொண்டர்கள் செய்யும் கடமையில் உச்சக்கட்ட விழிப்புணர்வைக்கொண்டு செயலாற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
18.4.2019 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்திலும்; தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முறையே, தாமரை, மாம்பழம், முரசு, ஆட்டோ ரிக்சா, ஜக்கு சின்னங்களிலும் வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மாபெரும் வெற்றிபெறச் செய்யுமாறு வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #LokSabhaElections2019 #OPS #EPS
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக வீசிவருகிற கடும் எதிர்ப்பு அலையை தாங்க முடியாமல் நவீன கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ளது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்தக் கூட்டணி 2004-ல் இணைந்து போட்டியிட்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பத்தாண்டு காலம் சிறப்பாக நடத்தியிருக்கிறது.
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தமிழகமும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பெற்று முன்னேறியது. ஆனால், பா.ஜ.க.- அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி திரைமறைவு பேரத்தின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அ.தி.மு.க. மீது தமிழக ஆளுநரிடம் 25 ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறிய பா.ம.க. 70 நாட்கள் கழித்து, யார் மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டுமென்று கோரியதோ, அவர்களோடு கூட்டணி சேர்ந்தது. எனவே, இந்தக் கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணி ராமதாசும், கடைந்தெடுத்த அவதூறு பிரச்சாரத்தை கையாண்டு வருகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் ராகுல்காந்தி கூறியதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
ராகுல்காந்தி இப்படி பேசியதாக கூறப்படுகிற அவதூறு பேச்சுக்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? எந்த ஊடகத்தில் வெளிவந்தது? இதற்கு அன்புமணி ராமதாஸ் ஆதாரத்தை காட்டுவாரா? மற்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கிறதா என்று கேட்கிற அன்புமணி ராமதாஸ் அவருக்கு அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல் காந்தி பேசாத பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா ? இப்படி எல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத்தான் முடியும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார் ? மத்திய பா.ஜ.க. நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய நீர்வள ஆணையம் தான் கர்நாடக அரசுக்கு கடந்த 2018 நவம்பர் 26 அன்று அனுமதி அளித்தது.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் செய்யக் கூடாது என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டை கர்நாடக அரசு மீறுவதற்கு துணை போனது பா.ஜ.க. அரசு என்பதை அன்புமணி ராமதாசால் மறுக்க முடியுமா?
மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, துரோகம் செய்த பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு துரோகம் செய்து, வஞ்சித்த பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. -பா.ம.க.வுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டிய வாய்ப்பாக வருகிற பாராளுமன்றத் தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்த பா.ஜ.க.வை ஆதரிக்கிற கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Loksabhaelections2019 #KSAlagiri #AnbumaniRamadoss
பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்துக்கு செல்லவுள்ளார். சமீப காலமாக ராகுல், பிரியங்கா இருவரும் அடிக்கடி குஜராத் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் மோடியும் குஜராத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் 5 பொதுக்கூட்டங்களில் பேச மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் நாளை குஜராத்தில் உள்ள ஹிமாத்நகர், சுரேந்திர நகர், அனந்த் ஆகிய 3 நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
நாளை மறுநாள் 18-ந் தேதி அம்ரேலி நகரிலும் 21-ந்தேதி குஜராத் மாநிலம் பதன்நகரிலும் பேசுகிறார். மீண்டும் 23-ந்தேதி அகமதாபாத் சென்று அங்கு தனது வாக்கை பதிவு செய்கிறார்.
அதன்பிறகு வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி 25-ந்தேதி மோடி வாரணாசி செல்கிறார். அங்கு நடக்கும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். அன்றிரவு அவர் வாரணாசியில் தங்குகிறார்.
மறுநாள் (26-ந்தேதி) வாரணாசி தொகுதியில் மோடி மனுதாக்கல் செய்கிறார். அன்றும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.
அமேதியில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்த போது 3 கி.மீ. தூர ரோடு ஷோ நடத்தினார். அதை மிஞ்சும் வகையில் பிரதமர் மோடி வாரணாசியில் 2 நாட்கள் ரோடு ஷோ நடத்தவுள்ளார்.
இதற்கிடையே அடுத்த வாரம் பிரியங்காவும் வாரணாசி தொகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். மோடியின் வாரணாசி பயணத்துக்கு முன்போ அல்லது பின்போ பிரியங்காவும் வாரணாசி செல்வார் என்று தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நியாய் ரத யாத்திரை நடத்த பிரியங்கா ஏற்பாடு செய்து வருகிறார். பதேபூர் சிக்ரி நகரில் பிரியங்கா இந்த பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதனால் அடுத்த வாரம் முதல் உத்தரபிரதேச தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்ட உள்ளது. #Loksabhaelections2019 #PMModi

தனது பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக துமக்கூருவில் மாபெரும் பேரணி நடத்திய அமித் ஷா இங்குள்ள சித்தகங்கா மடத்துக்கு சென்றார். பிரதமர் மோடியின் வெற்றிக்காக துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தில் அவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். #AmitShah #VictoryofModi #Siddagangamutt
தேர்தல் களம் பரபரப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. அது வெளிப்படும்போது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படும்.
நாளை மறுநாள் (18-ந் தேதி) 17-வது பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் பார்த்தவர்களும், ஓட்டளித்தவர்களும் இருப்பது அரிது.
தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய கண்ணம்மாள் என்ற மூதாட்டி வாழ்கிறார். 102 வயதாகும் அவர் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்களை பார்த்தவர். கந்தன்சாவடி அண்ணா நெடுஞ்சாலையில் வசித்து வருகிறார்.
அந்த பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவு திரட்டி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் இன்று கண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க வருபவர்களை அடையாளம் பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவரிடம் பாட்டி ஓட்டு கேட்க வந்திருக்கிறோம் என்றதும் உற்சாகத்தில் பேச தொடங்கினார்.
பேராண்டி, அந்த காலத்தில் இருந்தே ஓட்டு போடுகிறேன். அப்பெல்லாம் இப்படி கிடையாது. இப்ப திருவிழா மாதிரி நடக்குதே... என்று கூறி சந்தோஷப்பட்டார். அவரிடம் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலை சின்னத்தை கொடுத்து பாட்டி மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்றதும் கண்ணம்மாளின் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம். “மவராசன் எம்.ஜி.ஆர். அவருக்கு நிறைய தடவை இரட்டை இலையில் ஓட்டு போட்டிருக்கேன். நீங்களும் அந்த மவராசன் சின்னத்துக்குத்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கீங்களா... கண்டிப்பா இரட்டை இலைக்கு போடுவேன்பா என்றார்.
102 வயதிலும் எம்.ஜி.ஆரையும் அவர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னத்தையும் கண்ணம்மாள் பாட்டி நினைவில் வைத்திருந்ததை பார்த்ததும் வாக்கு கேட்டு சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.
இதுபற்றி கே.பி.கந்தன் கூறும்போது, இதுதான் இரட்டை இலையின் வெற்றி. இது வெறும் சின்னம் மட்டுமல்ல, மக்களின் எண்ணம். எந்த காலத்திலும் அவர்கள் உணர்வில் இருந்து இரட்டை இலை மறைய போவதில்லை என்றார். பின்னர் கண்ணம்மாளிடம் ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். #Loksabhaelections2019
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம். பல்வேறு வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விலக்கிக் கொண்டனர். தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை. உலகில் 10 சதவீத நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன
தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabheElections2019 #ChandrababuNaidu
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக கடந்த 1 மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்தனர். தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் விதியின்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். 18-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிகிறது.
இதன் பிறகு அரசியல்வாதிகள் யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது மட்டுமல்ல, வி.ஐ.பி. நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இன்று மாலை 6 மணிக்கு பிறகு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்கும் வரை இது அமலில் இருக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #Loksabhaelections2019 #ElectionCommission
சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம், மூவரசம்பட்டு உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிதாவது:-
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பல புதிய தொழிற்சாலைகள் அமையவகை செய்வேன். இதனால் தொழில் வளம் பெருகி பல ஆயிரம் இளைஞர் வேலைவாய்பு கிடைக்கும்.
தொகுதியில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கபடும். இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறித்த நேரத்தில் செல்லலாம். மக்கள் நலனயே சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். உங்கள் வாக்குகளை உதயசூரியனுக்கு அளியுங்கள் என பேசினார்.
அவருடன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் ரவி, ஊராட்சி கழக செயலாளர் ஜி.கே.விவேகாந்தன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர்.
தமிழ்நட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 18) தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18-ல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 18ல் ஒருநாள் சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PaidLeave #ElectionHoliday
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
25 நாட்களுக்கும் மேலாகத் தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் பயணித்து உங்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்தபோது நீங்கள் பொழிந்த அன்பும் மனமுவந்து வழங்கிய ஆதரவும் ஆரவாரமிக்க எழுச்சியான வரவேற்பும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதில் காட்டிய அசைக்க முடியாத உறுதியும் ஆழ்ந்த பெரும் நம்பிக்கையை அளித்திருக்கின்றன. அந்த நம்பிக்கை, முழுமையான வெற்றியாகப் பழுத்துப் பலன் தரும் என்ற எதிர்பார்ப்புடன் நான் மட்டுமல்ல, நாடே காத்திருக்கிறது.
5 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி, 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அதிலும் குறிப்பாக இந்த 2 ஆண்டுகால அடிமை ஆட்சி இவற்றின் கொடூரத் தாக்கங்களிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மட்டுமே இருக்கிறது. இது தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல என்பது பொதுமக்களாகிய உங்களுக்குத் தெரியும்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் நம்பிக்கையை உங்கள் எதிர்காலத்தை நாட்டின் வளர்ச்சியை மாநிலத்தின் உரிமையை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.

இப்போது கடைசி அஸ்திரமாக பணம் எனும் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். கட்சிகளையே பணத்தால் விலை பேசி கூட்டணிக்குள் கொண்டு வந்தவர்கள், வாக்காளர்களாகிய பொதுமக்களையும் விலை பேசிட முடியும் எனக் கருதி 200ரூபாயில் தொடங்கி, 20ஆயிரம் ரூபாய் வரை ஓட்டுக்கு விலை வைத்து விநியோகம் செய்து வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம், காவல்துறை, பறக்கும் படை என்றெல்லாம் சொல்லப்படும் அமைப்புகளில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை குறி வைப்பதும், விவசாயிகள் வணிகர்கள் ஏழை நடுத்தர மக்களை மடக்கி சோதனை என்ற பெயரில் பாடாய்படுத்துகிறார்களே தவிர, ஆட்சியில் உள்ளவர்கள் அமைத்துள்ள கூட்டணியின் பண விநியோகத்தைத் தடுக்கவில்லை, அதற்குத் துணை போகிறார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 650 கோடி ரூபாயை செலவழித்துதான் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகிவிட்டது.
இப்போது இன்னும் பல மடங்கு செலவு செய்வார்கள். ஏனென்றால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தங்கள் தலைவர் மகனின் நிறுவனத்துக்கும், தங்களுக்கு சகலமுமாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க மத்திய ஆட்சியாளர்களும், மாநில ஆட்சியாளர்களும் ஊழல் பணத்தை வைத்து மக்களெனப்படும் மகேசர்களையே விலைக்கு வாங்கிடக் களமிறங்கியிருக்கிறார்கள்.
வாக்குகளை விலை பேசுவதும், வாக்குச்சாவடியைக் கைப்பற்றத் திட்டமிடுவதும், மத உணர்வுகளைக் கிளறி விட்டு வன்முறைக்கு வழி வகுப்பதும் தோல்வி பயத்தில் தோய்ந்துள்ள அவர்களின் இறுதிக்கட்ட உபாயங்களாக இருக்கின்றன. நாம் உறுதியுடன் இருந்தால், கலைஞர் கற்றுத்தந்துள்ள அணுகுமுறையுடன் ஜனநாயகத் தேர்தல் களத்தை சந்தித்தால், நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. ஏப்ரல் 18ல் நடைபெறும் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் மே 19ல் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் முழு வெற்றி நமக்கே.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #LoksabhaElections2019 #DMK #MKStalin






