search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமி‌ஷன் தடுக்கவில்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமி‌ஷன் தடுக்கவில்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமி‌ஷன் தடுக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    25 நாட்களுக்கும் மேலாகத் தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் பயணித்து உங்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்தபோது நீங்கள் பொழிந்த அன்பும் மனமுவந்து வழங்கிய ஆதரவும் ஆரவாரமிக்க எழுச்சியான வரவேற்பும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதில் காட்டிய அசைக்க முடியாத உறுதியும் ஆழ்ந்த பெரும் நம்பிக்கையை அளித்திருக்கின்றன. அந்த நம்பிக்கை, முழுமையான வெற்றியாகப் பழுத்துப் பலன் தரும் என்ற எதிர்பார்ப்புடன் நான் மட்டுமல்ல, நாடே காத்திருக்கிறது.

    5 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி, 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அதிலும் குறிப்பாக இந்த 2 ஆண்டுகால அடிமை ஆட்சி இவற்றின் கொடூரத் தாக்கங்களிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மட்டுமே இருக்கிறது. இது தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல என்பது பொதுமக்களாகிய உங்களுக்குத் தெரியும்.

    எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் நம்பிக்கையை உங்கள் எதிர்காலத்தை நாட்டின் வளர்ச்சியை மாநிலத்தின் உரிமையை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.

    நாட்டை இருட்டில் தள்ளி பின்னோக்கி இழுத்த பாசிசஅடிமை ஆட்சியை ஒரு சேர விரட்டிட ஏப்ரல் 18ல் தீர்ப்பெழுதுங்கள்! மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்ட மத்திய, மாநில ஆளுங்கட்சிகளும் அவற்றுடன் கூட்டணியில் உள்ளோரும் தோல்வி பயத்தில் வசவுகளைஅவதூறுகளை தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை நோக்கி வீசிப்பார்த்தார்கள். மக்களே கேடயமாக இருந்து அந்த அவதூறு அம்புகளை முனை முறித்துப் போட்டு விட்டார்கள்.




    இப்போது கடைசி அஸ்திரமாக பணம் எனும் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். கட்சிகளையே பணத்தால் விலை பேசி கூட்டணிக்குள் கொண்டு வந்தவர்கள், வாக்காளர்களாகிய பொதுமக்களையும் விலை பேசிட முடியும் எனக் கருதி 200ரூபாயில் தொடங்கி, 20ஆயிரம் ரூபாய் வரை ஓட்டுக்கு விலை வைத்து விநியோகம் செய்து வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையம், காவல்துறை, பறக்கும் படை என்றெல்லாம் சொல்லப்படும் அமைப்புகளில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை குறி வைப்பதும், விவசாயிகள் வணிகர்கள் ஏழை நடுத்தர மக்களை மடக்கி சோதனை என்ற பெயரில் பாடாய்படுத்துகிறார்களே தவிர, ஆட்சியில் உள்ளவர்கள் அமைத்துள்ள கூட்டணியின் பண விநியோகத்தைத் தடுக்கவில்லை, அதற்குத் துணை போகிறார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 650 கோடி ரூபாயை செலவழித்துதான் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகிவிட்டது.

    இப்போது இன்னும் பல மடங்கு செலவு செய்வார்கள். ஏனென்றால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தங்கள் தலைவர் மகனின் நிறுவனத்துக்கும், தங்களுக்கு சகலமுமாக இருக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க மத்திய ஆட்சியாளர்களும், மாநில ஆட்சியாளர்களும் ஊழல் பணத்தை வைத்து மக்களெனப்படும் மகேசர்களையே விலைக்கு வாங்கிடக் களமிறங்கியிருக்கிறார்கள்.

    வாக்குகளை விலை பேசுவதும், வாக்குச்சாவடியைக் கைப்பற்றத் திட்டமிடுவதும், மத உணர்வுகளைக் கிளறி விட்டு வன்முறைக்கு வழி வகுப்பதும் தோல்வி பயத்தில் தோய்ந்துள்ள அவர்களின் இறுதிக்கட்ட உபாயங்களாக இருக்கின்றன. நாம் உறுதியுடன் இருந்தால், கலைஞர் கற்றுத்தந்துள்ள அணுகுமுறையுடன் ஜனநாயகத் தேர்தல் களத்தை சந்தித்தால், நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. ஏப்ரல் 18ல் நடைபெறும் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் மே 19ல் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் முழு வெற்றி நமக்கே.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #LoksabhaElections2019 #DMK #MKStalin
    Next Story
    ×