என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வியாசர்பாடி-நெற்குன்றத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019

    பெரம்பூர்:

    ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க தேர்தல் கமி‌ஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் பறக்கும்படையினரும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று இரவு வியாசர்பாடி முல்லைநகர் பஸ் நிலையம் அருகே எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் வாகனங்களில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தினார்கள். அதில் ரூ.36 லட்சம் இருந்தது.

    இதுபோல் மற்றொரு காரில் ரூ.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினி வேனில் இருந்த பணம் மின்சார வாரியாத்துக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.

    காரில் இருந்த பணம் டாஸ்மாக் கடையில் இருந்து வங்கிக்கு கொண்டு போகக்குடியது என்று அதில் இருந்த ஊழியர்கள் கூறினார்கள். என்றாலும் முறையான ஆவணம் இல்லாததால் 2 வாகனங்களில் இருந்த ரூ.56 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். தகுந்த ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் இன்று காலை 10 மணி அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஏழுமலை கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை மடக்கி சோதனை நடத்தினர். ஒரு பையில் ரூ.11லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிப்,வாசிம் அக்ரம் ஆகிய இருவரிடமும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் பணத்திற்கான ஆவணம் இல்லாததால் ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை வளசரவாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  #Loksabhaelections2019

    மத்திய உள்துறை மந்திரியும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #RajnathSingh #Rajnathfilesnomination #LucknowLSseat
    லக்னோ:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக 31-12-2005 முதல் 19-12-2009 வரை பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் 2000-ம் ஆண்டில் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

    பின்னர், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மந்திரிசபையில் 2003-ம் ஆண்டில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் துறை மந்திரியாக பதவியேற்றார். பின்னர், 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

    அதன் பிறகு 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள காசியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2014 பாராளுமன்ற தேர்தலில் ராஜ்நாத் சிங் இதே மாநிலத்தின் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரீட்டா பகுகுனா ஜோஷியை விட சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் உள்துறை மந்திரியாக பதவி வகிக்கும் அவர் இந்த தேர்தலிலும் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.



    இந்நிலையில், இன்று காலை பாஜக தொண்டர்களுடன் பேரணியாக சென்று லக்னோ மாவட்ட கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.

    80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் நேருக்குநேர் மோதுகின்றன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    அனைத்து கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    பிரபல பாலிவுட் நடிகரும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா லக்னோ தொகுதியில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என முன்னர் சில தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம். #RajnathSingh #Rajnathfiles #Rajnathfilesnomination #LucknowLSseat
    வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறுகிக் கொண்டே வரும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உறுதியளித்துள்ளார். #Siddaramaiah #ElectionCommission
    மைசூர்:

    கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில்  பாராளுமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

    இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமையா பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதியானவை அல்ல. விவிபேடுகளிலும் கோளாறுகள்  உள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.



    ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் சரியான வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைக்கே  மீண்டும் மாறிவிட்டன.  

    கடந்த 2014ம் ஆண்டு  தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்தன.  அதேப்போல் இந்த தேர்தலிலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனினும், இந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இயலாது.

    இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலையே வலியுறுத்துகிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட வேண்டும். பாஜகவிற்கு மக்கள் நிச்சயம் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.  

    இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #ElectionCommission 
    திருவையாறு அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019

    திருவையாறு:

    தஞ்சை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தஞ்சை பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி கலைச்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு பிரான்சிஸ் ஆகியோர் திருவையாறை அடுத்த ஈச்சங்குடி மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அந்தணர்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரகாஷ் (வயது24) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் வைத்திருப்பதும் தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவையாறு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச் செல்வம் முன்னிலையில் திருவையாறு தாசில்தார் இளம்மாருதியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார். #Loksabhaelections2019

    ஒரே இடத்தில் இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக தி.மு.க.வினர் வீடு புகுந்து தன்னை மிரட்டியதாக கரூர் மாவட்ட கலெக்டர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KarurCollector #DMK
    கரூர்:

    கரூரில் இன்று மாலை பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் நடக்கிறது. மனோகரா கார்னரில் இறுதிக்கட்ட பிரசாரத்தினை நிறைவு செய்வதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தங்களுக்கு முதலில் வழங்கிய இறுதி கட்ட பிரசார நேர அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரி சரவணமூர்த்தியை சந்தித்து முறையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விசாரணை நடத்தி காங்கிரஸ் வேட்பாளருக்கு அனுமதி வழங்கினார்.

    இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கட்சியினர் திரண்டு சென்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த அனுமதிக்குமாறு மனு கொடுத்தனர்.

    இந்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இன்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    கடந்த சில தினங்களாக அதிகாரிகளுக்கு அதிகமாக அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நள்ளிரவில் 12.45 மணிக்கு கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உத்தரவின்பேரில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் அறிவுரையின் பேரில் வக்கீல் செந்தில் என்பவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் எனது வீட்டிற்கு வந்தார்.

    மேலும் தகராறு செய்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டார்கள். நான் உடனே செந்தில் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். இறுதி கட்ட பிரசாரம் தொடர்பாக இன்று காலை அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என்றேன். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர்.

    நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து எங்களை பாதுகாத்தார். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அவரும் மனிதர் தானே.

    சிறைப்பிடித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தர்மசங்கடமான நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

    இந்த அனுமதி விவகாரம் மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு. எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurCollector #DMK
    பறக்கும் படையினர் நடத்தி வாகன சோதனையில் டாஸ்மாக் வசூல் ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Loksabhaelections2019

    போரூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர், பணம்-பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கே.கே.நகர் பி.டி. ராஜன் சாலை அண்ணா மெயின் ரோடு சந்திப்பில் நேற்று நள்ளிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கம் இருந்தது. உடனடியாக பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து உதவி தேர்தல் அலுவலர் பிரகதீஷ் ஈஸ்வரி விசாரணை நடத்தினார். காரில் இருந்த 2 பேரும் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதும், விருகம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள டாஸ்மாக் வசூல் பணத்தை கட்டுவதற்காக காரில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் உரிய ஆவணங்கள் கொண்டு வந்தனர். அனைத்தையும் சரி பார்த்த பின்னர் பணத்தை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

    தேர்தல், பள்ளி மாணவர்களின் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லக் கூடியவர்கள் இன்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. #Loksabhaelections2019
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 18-ந்தேதி அரசு விடு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் இன்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும் நாளையும் கூடுதலாக பஸ்களை விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாளை மகாவீர் ஜெயந்தி, மறுநாள் வாக்குப்பதிவு, 19-ந்தேதி பெரிய வெள்ளியை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் இன்று மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


    தேர்தல் என்பதற்காக மட்டுமல்ல தொடர் விடுமுறை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம். தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும். தேர்தல் நடைபெறுவதால் அதனை கவனத்தில் கொண்டு எந்தெந்த பகுதிகளுக்கு சிறப்பு பஸ் தேவை என்பதை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களானது விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பாக விடப்படுகிறது.

    மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், சேலம், கோவை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், பகுதிகளுக்கு கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பஸ்கள் மட்டும் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம்போல புறப்பட்டு செல்லும். சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எதுவும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #TNBuses #SpecialBuses
    கர்நாடக மாநிலத்தில் இன்று முதல்வருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #ITRaidsKarnataka
    பெங்களூரு:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் 11ம் தேதி முடிவடைந்தது. நாளை மறுநாள் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹசன், மாண்டியா ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தொடர்புடைய நபர்கள், முதல்வர் குமாரசாமிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளின் இந்த சோதனை நடந்தது. பல்வேறு தொழிலதிபர்கள் வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



    ரியல் எஸ்டேட், கல் குவாரி, அரசு ஒப்பந்ததாரர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், சா மில் மற்றும் கூட்டுறவு வங்கி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தலும், 23-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #ITRaidsKarnataka
    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம் என தமிழ் மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    சென்னை:

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் வணக்கம், நம் தமிழ் மாநிலத்தில் இருக்கும் எல்லா தமிழ் அன்பர்களுக்கும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். இந்த தேர்தல் நேரத்தில் நாம் நம் பொறுப்பை நல்லப்படியாக கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. இதை நாம் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும், தேர்தல் நாளான 18-ந் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் நான் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்து விட்டு மீண்டும் உடனே இங்கு திரும்ப வேண்டி உள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்கு காரணம், இது மிக மிக முக்கியமான பொறுப்பு.

    நம் நாட்டின் முன்னேற்றம், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் நம்கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு என்பது ஒரு சாமானியமான வி‌ஷயம் அல்ல. ஜனநாயகம் வருவதற்கு முன் நாட்டின் தலைவரை நிர்ணயிக்கும் சக்தி கிடையாது. இப்போது தான் இந்த சக்தி நம் கையில் இருக்கிறது. இதை நீங்கள் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் மக்கள் எல்லாரும், ஒருவர் விடாமல், உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டு போடுங்கள். பிறர் சொல்வதை வைத்தும், ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் தவறை காங்கிரஸ் கட்சி நிச்சயம் சுட்டிக்காட்டும் என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    பிரதமர் மோடி, இந்தியாவில் காங்கிரஸின் எண்ணங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறினார். இதற்கான பதிலாக காங்கிரஸ், மோடியிடம் என்ன கூறுகிறது என்றால், நாங்கள் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. உங்கள் தவறை சுட்டிக்காட்ட நிச்சயம் போராடுவோம்.   தேர்தலில் உங்களை தோற்கடிப்போம். ஆனால் உங்களுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடமாட்டோம்.

    நான் வட இந்தியாவின் அமேதி தொகுதியில் போட்டியிடுவது தான் வழக்கம். ஆனால் இம்முறை, கேரளாவில் இருந்து போராடுவேன் என தென் இந்திய மக்களுக்கு கூறவே போட்டியிடுகிறேன். மேலும் இந்தியாவை ஒரே கோணத்தில் பார்க்க இயலாது. இந்தியா ஒரே சிந்தனையை கொண்டு செயல்படவில்லை. இந்தியா பல்வேறு கோணங்களில், பலதரபட்ட பார்வைகளை கொண்டுள்ளது. இவை அனைத்தும் முக்கியமானவை ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #RahulGandhi

    ஓட்டுப்பதிவு எந்திரத்தில் விவசாயி சின்னத்தை மறைப்பதால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். #Seeman
    சென்னை:

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு சீமான் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை மங்கலாக கண்ணுக்கு தெரியாத வகையில் தேர்தல் ஆணையம் அச்சிட்டுள்ளதாக நாம்தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சின்னங்கள் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால் நாம் தமிழர் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.



    விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் சின்னம் சிறியதாக உள்ளது. இதனால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது.

    தமிழகம் முழுவதும் மக்கள் எங்களை ஆதரித்து வருகிறார்கள். இதனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளும் அதிகார வர்க்கத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம், அடிபணிந்து விட்டது.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #EC #VelloreConstituency
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் முன்னாள் அமைச்சரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, டி.டி. வி.தினகரன் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்கள்.

    மொத்தம் 23 வேட்பாளர்கள் வேலூர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    வெற்றியை பறிக்க அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. வார்டு வாரியாக பணம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மறுநாள் (30-ந்தேதி)யும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது.

    சோதனையின்போது கணக்கில் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    இந்த சோதனைக்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேலூரில் தேர்தலை நிறுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை கைவிடவில்லை. துரை முருகனின் கல்லூரி, பள்ளியிலும் சோதனை நடத்தினார்கள்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி காட்பாடி அருகே தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அந்த பணத்தை கணக்கிட்டபோது 11 கோடியே 48 லட்சம் ரூபாய் இருந்தது. ஒவ்வொரு பணக்கட்டு மீதும் வார்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தன. எனவே அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    பணம் பதுக்கி வைத்திருந்த தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து பூஞ்சோலை சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி கணவர் தாமோதரன் ஆகியோர் மீது தலா 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்வது பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் இது தொடர்பாக காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி னார்கள்.

    முடிவில் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கதிர்ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் தொகுதியில் பணப்பட்டு வாடா செய்ய ஏற்பாடுகள் நடந்து இருப்பது உறுதியானதால், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் சிக்கியது பற்றிய தகவல் அறிக்கையை வருமான வரித்துறையிடம் இருந்து தமிழக தேர்தல் ஆணையம் பெற்றது.

    அந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் வேலூர் தொகுதி நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

    இந்த விவகாரத்தில் நேற்று மதியம் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் நேற்று மாலை இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற திடீர் பரபரப்பு உருவானது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தனது வேட்பு மனுவில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் பணப்பட்டுவாடாவுக்கு கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

    தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்ட அறிவிக்கையில் ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்து போட்டு இருப்பதால் அதை ரத்து செய்ய ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்று காலை வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ரத்து தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்று காலை தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் கூறியதாவது:-

    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #VelloreConstituency

    ×