search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்பு மனு தாக்கல்
    X

    லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்பு மனு தாக்கல்

    மத்திய உள்துறை மந்திரியும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #RajnathSingh #Rajnathfilesnomination #LucknowLSseat
    லக்னோ:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக 31-12-2005 முதல் 19-12-2009 வரை பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் 2000-ம் ஆண்டில் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

    பின்னர், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மந்திரிசபையில் 2003-ம் ஆண்டில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் துறை மந்திரியாக பதவியேற்றார். பின்னர், 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

    அதன் பிறகு 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள காசியாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2014 பாராளுமன்ற தேர்தலில் ராஜ்நாத் சிங் இதே மாநிலத்தின் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரீட்டா பகுகுனா ஜோஷியை விட சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் உள்துறை மந்திரியாக பதவி வகிக்கும் அவர் இந்த தேர்தலிலும் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.



    இந்நிலையில், இன்று காலை பாஜக தொண்டர்களுடன் பேரணியாக சென்று லக்னோ மாவட்ட கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.

    80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் நேருக்குநேர் மோதுகின்றன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    அனைத்து கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    பிரபல பாலிவுட் நடிகரும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா லக்னோ தொகுதியில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என முன்னர் சில தகவல்கள் வெளியானது நினைவிருக்கலாம். #RajnathSingh #Rajnathfiles #Rajnathfilesnomination #LucknowLSseat
    Next Story
    ×