என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    கடலூர் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் தம்பியிடம் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.

    இதன் காரணமாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் 27 பறக்கும் படை குழுவும், 27 தேர்தல் விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள், 9 வீடியோ கிராபர்கள் மற்றும் போலீசார் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

    மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பணமோ, நகையோ அல்லது பொருட்களை எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே எடுத்துச் செல்லும் நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    உரிய ஆவணம் செலுத்தாவிட்டால் அவர்கள் முறைப்படி ஆவணங்கள் காண்பித்து அதன் பிறகு தங்கள் பணமோ அல்லது பொருட்களை வாங்கி செல்லலாம்.

    இந்த நிலையில் கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் என்ற பகுதியில் தாசில்தார் சிவா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டனர்.

    காரில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது 4 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை எடுத்து வந்த நபர் யார்? என்று விசாரணை செய்தனர். அவர் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாலமுருகனின் தம்பி முருகன் என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், காட்டுமன்னார்கோவிலில் இருந்து கடலூருக்கு வந்தாகவும், இந்த பணம் காண்டிராக்ட் தொழிலுக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் இதற்கான ஆவணங்கள் எதுவும் அவர் காண்பிக்கவில்லை. மேலும் இதனை தொடர்ந்து இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    மேட்டுப்பாளையத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 10.50 மணிக்கு மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் சீட்டின் கீழ் பகுதியில் ஒரு கைப்பையில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் அப்துல் ஹக்கீம் என்பது தெரிய வந்தது. அவர் மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் புதிய மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    இந்த பணத்தை ஊட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நிலையான கண்காணிப்பு குழுவினர் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வேண்டும். இது தொடர்பாக நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் கூறுங்கள் என பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அப்துல் ஹக்கீம் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் வந்தார். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தாருமான புனிதாவிடம் காய்கறி மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொடுக்க தான் இந்த பணத்தை கொண்டு செல்கிறேன். பணத்தை கொடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.இதற்கான சில ரசீதுகளையும் காண்பித்தார். அவரிடம் அதிகாரிகள் தேர்தல் நன்னடத்தை விதிப்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

    இந்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழுவிடம் ஒப்படைத்து விடுவோம். அங்கு உரிய ஆவணங்களை நீங்கள் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என கூறிவிட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்படட பணம் கோவையில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  #LSPolls

    நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது கண்டனத்துக்குரியது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #ElectionCommission #ThiruparankundramElection #MadrasHC
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் தமிழ்நாட்டில் 2-வது கட்டமான ஏப்ரல் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கடந்த 10-ந்தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டசபை தொகுதி தேர்தல்களும் பிறகு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த 3 தொகுதிகளிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தலை நடத்த இயலாது என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து இருந்தது. இதற்கு தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன.

    அ.தி.மு.க. அரசை காப்பாற்றவே ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்று தி.மு.க. குற்றம் சாட்டியது. அதோடு தேர்தல் கமி‌ஷனிடம் மனு கொடுத்தது. கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    இதற்கிடையே நிலுவையில் இருக்கும் வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதன்பேரில் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த டாக்டர் சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.

    டாக்டர் சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.

    ஏ. கே. போஸின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தார்.

    அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கவில்லை.



    இதையடுத்து, தான் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாகவும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் சரவணன் கடிதம் அனுப்பினார். அதேபோல, ஐகோர்ட்டிலும் தன்னுடைய வழக்கை வாபஸ் பெறுவதாக ஒரு மனுவை சரவணன் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.வேல்முருகன் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது டாக்டர் சரவணன் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கை காரணம் காட்டி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கையே என் கட்சிக்காரர் திரும்ப பெற முடிவு செய்து, மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி கூறியதாவது:-

    கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த தேர்தல் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது தவறு. கண்டனத்துக்குரியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாட்டிற்கு ஐகோர்ட்டு பொறுப்பாகாது. இருந்தாலும், திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு தொடர்பான தீர்ப்பு வருகிற 22-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும்.

    இவ்வாறு நீதிபதி கூறினார். #ElectionCommission #ThiruparankundramElection #MadrasHC
    பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MaduraiConstituency #LSPoll #CEO
    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவு வெகுவாகக் குறையும் என்று கூறி, தேர்தலை ஒத்திவைக்கும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. பின்னர் வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.



    மதுரையில் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #MaduraiConstituency #LSPoll #CEO
    திருச்சி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் தேர்தல் விதிமுறையால் பரிசுகள் கிடைக்காமல் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். #Jallikattu #Election

    லால்குடி:

    திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    இதில் திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 564 காளைகள் கலந்து கொண்டன. 254 காளையர்கள் பங்கேற்று, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், மொபட், சில்வர் குடம், தங்க, வெள்ளி காசுகள் என்று சுமார் ரூ.5 லட்சத் துக்கு மேல் பரிசுகள் வழங்குவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்க கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதனால், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய விழா குழுவினரால் பரிசுகள் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #Jallikattu #Election

    தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து 22-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். #LSPolls #Kanimozhi #Vaiko
    சென்னை:

    தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும். இந்திய அரசியலில் இந்த தேர்தல் திருப்புமுனையாக அமையும்.

    முல்லைபெரியாறு, காவிரி நதிநீர் விவகாரத்திலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதி அளித்ததிலும் மோடி அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகளின் பிரதிநிதித்துவமாக இருக்கும் பா.ஜனதா தலைமையிலான அணி வெற்றிபெறாது. வெற்றிபெறக்கூடாது.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாராளுமன்ற மாநிலங்களவையில் குரல் கொடுத்து தி.மு.க.வுக்கு பெருமை சேர்த்த கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

    நான் எனது பிரசாரத்தை 22-ந்தேதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இருந்துதான் தொடங்குகிறேன். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் என்று முதல் நாள் பிரசாரத்தை மாலை 4 மணிக்கு தொடங்கி முடித்து மறுநாள் மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் எங்கும் அவருடைய பிரசார பயணம் மகத்தான வெற்றியை இந்த அணிக்கு குவிக்க இருக்கிறது. நானும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். அதைத்தான் மு.க. ஸ்டாலினும் விரும்பினார்.

    எங்களது தேர்தல் அறிக்கை 20-ந்தேதி வெளியிடப்படும். 22-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி மாலை 4 மணி வரை என்னுடைய பிரசாரம் நடைபெறும். என்மீது பாசமும், பரிவும் கொண்ட அன்புத்தங்கை கனிமொழி மாபெரும் வெற்றிபெற்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    கேள்வி:- தூத்துக்குடி தொகுதியில் உங்களை எதிர்த்து மு.க.அழகிரி மகன் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வருகிறதே?

    பதில்:- இது உங்களின் கற்பனையாகவும், ஆசையாகவும் இருக்கலாம். எனக்கு தெரிந்து அது உண்மை இல்லை.

    கே:- தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

    ப:- தி.மு.க. இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறதே தவிர வெளியில் இருந்து யாரையும் கொண்டுவந்து வாய்ப்பு வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Kanimozhi #Vaiko
    அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். #LSPolls #DMDK #DMDKCandidates
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணி நிறைவடைந்ததும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வேட்பாளர்களை அறிவித்தார்.



    அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக செயலாளருமான எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். திருச்சியில் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் அழகர்சாமி, வடசென்னையில் அழகாபுரம் மோகன் ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால், கவுதம சிகாமணியை எதிர்த்து சுதீஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.  #LSPolls #DMDK #DMDKCandidates
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய ரூ.17.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது.

    அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது அவர் வீரடிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், அந்த பணத்தை கந்தர்வக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அருள் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, வெளிநாட்டு பணத்தை பண பரிமாற்றம் செய்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்து கமி‌ஷன் பெறுவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் கூறினார்.

    இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் அந்த பணத்தை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் அருளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #LSPolls

    கட்சியின் வெற்றிக்காக மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று சு.வெங்கடேசன் கூறினார். #Parliamentelection #DMK #MKAzhagiri

    மேலூர்:

    தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று மேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநிலத்திலேயே மதுரை மாவட்டம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இதனை மாற்ற பாடுபடுவேன்.

    அதேபோல் மேலூர் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் தற்போது விவசாயம் மிகவும் பாதித்துள்ளது. இதனை மாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வெற்றி பெற்றவுடன் பாடுபடுவேன்.


    இரண்டொரு நாட்களில் கட்சியின் வெற்றிக்காக மு.க.அழகிரியை சந்திக்க உள்ளேன்.

    அழகிரி மட்டுமல்ல, மதுரை பாராளுமன்ற தொகுதியிலுள்ள 15 லட்சம் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளேன்.

    தொழில் வளர்ச்சியில் மதுரை முன்னேற்றமடையும் வகையில் தேர்தல் அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #DMK #MKAzhagiri

    தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறினார். #DMDK #Premalatha #Vijayakanth
    போரூர்:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

    அந்த கட்சிக்கு வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் வெளியிடுகிறார்.

    இந்த நிலையில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தனது பிறந்தநாளை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    துணை செயலாளர் எல். கே.சுதீஷ், அவரது மனைவி ஜோதி, பார்த்தசாரதி மாவட்ட செயலாளர்கள் போரூர் தினகர், வேளச்சேரி பிரபாகர், ஆனந்தன் சதிஷ் காந்த், அண்ணல் ஜே உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட உள்ளார்.

    எங்களது மெகா கூட்டணி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் நலன்களை பூர்த்தி செய்வோம். தி.மு.க. வாரிசு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது அவர்களின் நிலைப்பாடு. அதை பற்றி பதில் சொல்ல நான் விரும்பவில்லை. இதனை மக்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #Premalatha #DMK
    அதிமுக தேர்தல் பிரசாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தினர். #ADMK #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. 18 சட்ட சபை இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.

    அடுத்த கட்டமாக தேர்தல் பணி, பிரசார வியூகம் பற்றி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    முதல்-அமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் தேர்தல் பிரசார தேதி தேர்தல் ஏற்பாடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPS

    தூத்துக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடிய மிக மோசமான சூழ்நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் தூத்துக்குடியில் சிறு தொழில்கள், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு பெண்களும், இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு புதிய தொழில் முயற்சிகளுக்கு சாத்தியம் உள்ளது. விவசாயிகளுக்கு உதவி செய்யக்கூடிய வழிவகைகள் இருந்தும் அது செயல்படுத்தப்படவில்லை.

    கிராமப்புற மக்களுக்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. எனவே அங்கு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

    கேள்வி:- கலைஞர் இல்லாமல் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறீர்களே?

    பதில்:- கலைஞர் இல்லை என்பது எல்லோருக்குமே பாதிப்புதான். தனிப்பட்ட முறையில் தந்தை என்கிற வகையில் எனக்கு பெரிய வலியையும், வருத்தத்தையும உருவாக்கி உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பக்கூடிய தலைவராக கடினமாக உழைக்கக்கூடிய தலைவராக எனக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.



    கே:- தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறதே?

    ப:- இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. பா.ஜனதா என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் சந்திக்கலாம்.

    கே:- தமிழிசை போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்குமா?

    ப:- பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #TamilisaiSoundararajan
    ×